சில தினங்களுக்கு முன்னர் தெற்கில் பெருமளவில் முன்னெடுக்கப்படும் இந்திய எதிர்ப்பு பிரசாரம் குறித்து எழுதியிருந்தேன்.
நேற்று முன்தினம் தெற்கு முழுவதும் ஒரே வகையான சுவரொட்டிகள் இரவோடு இரவாக ஒட்டப்பட்டிருந்தனவாம்.
பல லட்சம் சுவரொட்டிகளை அச்சிட்டு, அதேவேளை ஒரே இரவில் தெற்கு முழுவதும் ஒட்டுவதெனில் அது ஒரு பாரிய நிறுவனமயப்படுத்தப்பட்ட பிரசாரம் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இந்தப் பிரசாரங்களின் பின்னணியில் சீனாவின் கரங்கள் இருக்கலாம் என்று நம்பப்படுகின்ற அதேவேளை, அதற்கு தெற்கில் மக்கள் எதிர்ப்பு காரணமாக அதல
பாதாளத்திற்கு சென்று விட்ட ஒரு கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் இருப்பதாக பரவலாக பேசப்படுகின்றது என்கிறார்.
தெற்கில் விசயம் அறிந்த நண்பர் ஒருவர். தெற்கில் சிங்கள மக்களை இந்தியாவுக்கு எதிராக கிளர்ந்து எழச் செய்ய சிலர் முயன்று
வரும் அதேவேளையில்தான், வடக்கிலும் இந்தியாவுக்கு எதிரான மனநிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு சிலர்முயன்று கொண்டிருக்கின்றனர். எதற்கெடுத்தாலும், அது இந்தியாவின் பின்னணியில் நடப்பதாக கட்டுகதைகளை பரப்புவதையே பிரதான தொழி
லாக கொண்டு செயல்படுகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படவேண்டும் என்று சொன்னாலும் அதன் பின்னால் இந்தியா இருக்கின்றது என்கின்றனர்.
இவை எல்லாம் தமிழ் மக்கள் மத்தியில் இந்திய எதிர்ப்பு உணர்வை விதைப்பதற்கான முயற்சியே என்பதை புரிந்துகொள்ள ஆறு அறிவு தேவையில்லை.
சில தினங்களுக்கு முன்னர் இந்தப் பத்தியில் தமிழ் அரசு கட்சியின் பிரித்தானிய மன்றம் என்ற பெயரில் சிலர் கூட்டம் ஒன்றை நடத்தியது தொடர்பாகவும் அதில் புதிய நிர்வாகிகள் தெரிவுசெய்யப்பட்டமை தொடர்பாகவும் எழுதியிருந்தமை வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
அப்படி யாருக்குமே புலம்பெயர் நாடுகளில் கிளைகளை அமைப்பதற்கு அனுமதி கொடுக்கவில்லை என்று கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம்
அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
அத்தோடு அவர் தனது பணி முடிந்துவிட்டது என்று இனி ஒதுங்கிக்கொள்வாரோ தெரியவில்லை.
ஏற்கனவே தமிழ் அரசு கட்சிக்கு பிரித்தானியாவில் கிளை ஒன்று இயங்கி வருகின்றது.
அதன் செயல்பாட்டாளர்கள் சிலர் கட்சிக்காக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
அதேபோல கனடாவிலும் கட்சிக்கு ஒரு கிளை உண்டு. அந்தக் கிளையும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.
அதிகம் ஏன், அந்தக் கிளையில் தீவிர செயல்பாட்டாளராக இருந்தவர்தான் திருகோணமலை குகதாசன்.
அவரே திருகோணமலையில் கடைசியாக நடைபெற்ற செயல்குழுக் கூட்டத்தில் பொதுச்செயலாளராக தெரிவானவர்.
அவரது தெரிவே கட்சிக்குள் கடைசியாக பூகம்பம் ஏற்படக் காரணமாக இருந்தது.
அதைவிட கனடா கிளையே தமிழ் அரசு கட்சியின் தாயக செயல்பாடுகளுக்கு அதிக நிதி உதவியை செய்துவருவதாகவும் கூறப்படுவதுண்டு.
இந்த நிலையிலேயே புலம்பெயர் நாடு எதிலும் கட்சிக் கிளைகள் அமைப்பதற்கு யாருக்கும் தாம் அனுமதி கொடுக்க வில்லை என்று பதில் செயலாளர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில் அவர் எந்த இடத்திலும், பிரித்தானியாவில் ஏற்கனவே தமக்கு ஒரு கிளை இருப்பது பற்றியோ அல்லது கனடாவில் இருப்பது பற்றியோ குறிப்பிடவில்லை.
பிரித்தானியாவில் அண்மையில், இலங்கை தமிழ் அரசு பிரித்தானிய மன்றம் என்ற பெயரில் அமைக்கப்பட்ட கட்சி, பிரித்தானியாவில் வர்த்தக நிறுவனங்களை பதிவு செய்யும் அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது.
அதாவது ஒரு வர்த்தக நிறுவனம்போல பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது.
அது அவர்களுக்கு வர்த்தக நோக்கமாகவே இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அந்த கூட்டத்திலும், அது தொடர்பான விளம்பரங்களிலும் தமிழ் அரசு கட்சியின் உத்தியோக பூர்வ இலச்சினையையும் சின்னத்தையுமே பயன்படுத்தியிருந்தனர்.
உண்மையாகவே அப்படிதமிழ் அரசு கட்சி யாருக்கும் கிளை அமைப்பதற்கோ அல்லது, மன்றம் அமைப்பதற்கோ அனுமதி கொடுக்கவில்லை என்றால், தமது உத்தியோகபூர்வ சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க முடியும் என்கிறார் பிரித்தானிய சட்டம் தெரிந்த ஒருவர்.
அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், இதுபோன்று இனி எல்லோருமே புலம்பெயர் நாடுகள் தோறும் கட்சிக் கிளைகளை அமைக்கத் தொடங்கி
விடுவார்கள்.
தமிழ் அரசு கட்சிக்குத்தான் சட்டநவடிக்கை எடுப்பதில் அனுபவம் இல்லையா என்ன?.
- ஊர்க்குருவி.