இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரத்தை சுமுமாகத் தீர்த்துவைக்கப் பலரும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டுதான் இருக்கின்றனர் என்பதை அவ்வப்போது அறியமுடிகின்றது.
அண்மையில்கூட, சிறீதரன்-சுமந்திரனை சந்திக்க வைத்து அவர்களிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு ஒரு முயற்சி கொழும்பில் நடந்தது என்றும் அதுவும் இணக்கம் எதனையும் ஏற்படுத்த முடியாமலே முடிவடைந்ததாகவும் தெரியவந்தது.
இதுபோன்ற தகவல்கள் கிடைக்கின்றபோதெல்லாம் நமது மனதில் ஏற்படுகின்ற கேள்வி ஒன்றுதான். அநேகமாக உங்கள் ஒவ்வொருவருக்கும் அது ஏற்படலாம்.
அந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் இருக்கின்றது.
அதனை – அதாவது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்னையை நீதிமன்றம்வரை கொண்டு சென்றவர் நிச்சயமாக கட்சி நலனை மட்டும் கருத்தில்கொண்டு இதனைச் செய்திருக்க முடியாது.
இதனை செய்தவருக்கு மட்டுமே அதன் உள்நோக்கம் என்ன என்பது தெரிந்திருக்கும். ஆனால், நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அதுதொடர்பான
செய்தி வெளியே வந்தபோது தான் தங்களுக்கு அதுபற்றித் தெரிய வந்தது என்றே சிறீதரனும் சரி – சுமந்திரனும் சரி சொல்லி வருகின்றனர்.
அப்படியானால், இவர்கள் இருவரும் அடிக்கடி சந்திப்பதன் மூலம் எத்தகைய இணக்கப்பாட்டை இந்த வழக்கு விவகாரத்தில் அடைய முடியும் என்பதுதான் தெரியவில்லை. ஏனெனில், இந்த வழக்கைப் பொறுத்தவரை இருவருமே எதிராளிகள்.
ஒரு வழக்கில் எதிர்வாதிகளாகப் பெயர் குறிப்பிடப்பட்ட இருவர் அடிக்கடி சந்தித்து அந்த வழக்கை இணக்கப்பாட்டுடன் முடித்துவைக்க பேசுகின்றனர் என்பதுதான் பல கேள்விகளை ஏற்படுத்துகின்றன.
இப்போது வழக்கில் எதிர்த்தரப்பினராக பெயர் குறிப்பிடப்பட்டவர்களில் சுமந்திரன் தவிர மற்றைய அனைவருமே ஜனவரி 21ஆம் 27ஆம் திகதிகளில்
நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை செயல் படுத்துவதை தடுக்க வேண்டும் என்ற கட்டாணையை ஏற்றுக் கொண்டுவிட்டதால் மீண்டும் பொதுச்சபைக்கும் செயல்குழுவுக்கும் புதிதாக ஆட்களை தெரிவுசெய்து – மீண்டும் தெரிவுகளை செய்வதற்கு ஒப்புதல் வழங்கிவிட்டனர். சுமந்திரன் மட்டுமே தனது பதிலை நீதிமன்றத்துக்கு இன்னமும் தெரிவிக்கவில்லை.
ஆனால், பொதுச் சபைக்கு கட்சி யாப்பில் தெரிவிக்கப்பட்ட தொகையைவிட அதிக உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டிருப்பதான கருத்தை ஏற்கனவே சுமந்திரன்
பகிரங்கமாக சிறீதரனுக்கு எழுதிய கடிதத்திலும் தெரிவித்திருந்தார்.
ஆகவே, அவரும் அந்தத் தவறை ஏற்றுக்கொள்வார் என்றே நம்பலாம். ஏனெனில், இந்தத் தவறுகளைச் செய்தது கடந்த பத்து ஆண்டுகளாக அதன் தலைவராக இருந்த மாவை சேனாதிராசாதான் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
அதுவல்ல நாம் இன்று சொல்ல வருவது, வழக்கை சுமுகமாக முடித்து வைப்பதற்காக இவர்கள் இருவரும் எதற்காக அடிக்கடி சந்திக்கின்றனர் என்பது தெரியவில்லை.
உண்மையிலேயே இருவரும் இந்த வழக்கை சுமுகமாக முடித்துவைத்து கட்சியின் அலுவல்களை கொண்டு செல்வதென்றால், இருவருமாக வழக்காளியை அல்லவா சந்திக்க வேண்டும்? என்று ஒரு சட்டம் தெரிந்த ஊடக நண்பரிடம் கேட்டேன்.
அவர் சொன்ன தகவல் – அல்லது பதில் சற்று வித்தியாசமாக இருந்தது. தலைவர் தேர்வுக்கான தேர்தலில் சிறீதரனுக்குப் பதிலாக சுமந்திரன் வெற்றிபெற்று, அதற்கு பின்னர் இப்படி ஒரு வழக்கை யாரேனும் தாக்கல் செய்திருந்தாலும் அந்த வழக்கு இன்றிருக்கும் நிலையில் தான் இருந்திருக்கும். ஏனெனில், கட்சி யாப்பின்படி எந்த விடயமும் நடக்கவில்லை என்பதை சுமந்திரனே தனது பகிரங்கக் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக சிறீதரனும் சுமந்திரனும் அடிக்கடி சந்தித்து இணக்கப்பாட்டை அடைய முயற்சிப்பதாகக் கூறப்படுவது ஏதோ, சிறீதரனால் இந்த விடயத்தைக் கையாள முடியவில்லை என்பது போலவும் அதனால்தான் இந்த விடயம் இழுபறியில் தொடர்கின்றது போலவும் ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி வருகின்றது என்றார் அந்த ஊடக நண்பர்.
ஆனால், வழக்கு என்று வந்து விட்டால் எந்தச் சட்டம் தெரிந்தவர்கள் என்றாலும் அதனை எதிர்கொள்வதற்கு சில காலங்களைச் செலவுசெய்யத்தானே வேண்டியிருக்கும்.
அநேகமாக அடுத்த தவணையில் இல்லாவிட்டாலும் அடுத்தடுத்த தவணைகளிலாவது வழக்கு முடிந்துவிடும் என்று நம்புவோம்.
அப்படி இல்லாமல் அது தொடரும் என்றால், இவை எல்லாம் எப்போது முடிவான விடயங்களாகவே இருக்கும்.!
ஊர்க்குருவி.