இப்படியும் நடக்கிறது

0
109

கடந்த இரண்டாயிரத்து பதினைந்தாம் ஆண்டு ஜனாதி பதித் தேர்தல் முடிவடைந்து, நல்லாட்சி அரசின் நூறு நாள் வேலைத்திட்டம் முடிந்து, பாராளுமன்ற தேர்தல் பிரசாரக் காலம் அது.
அந்தத் தேர்தல் பிரசாரக் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட் டியல் எம்.பி.யாக இருந்த மதி யாபரணம் ஆபிரகாம் சுமந்தி ரன், டான் தொலைக்கட்சியில் பேட்டியளித்தார்.
அந்தப் பேட்டியை கண்டவர் டான் குழுமத்தின் தலைவர் குகநாதன். அவர் பேட்டி ஆரம்பித்தபோது கேட்ட முத லாவது கேள்வி இதுதான்: ‘கடந்த ஜனாதிபதித் தேர் தலில் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் மைத்திரிபால சிறி சேனவுக்கு ஆதவளித்தோம்.
அப்படிச் செய்யாமல் அந்தத் தேர்தலில் நீங்களோ அல்லது சம்பந்தன் ஐயாவோ தமிழ் வேட்பாளராக போட்டியிட் டிருந்தால் ஏழு இலட்சம் வாக்குகளை பெற்றிருப்பீர்கள். அப் படி பெற்றிருந்தால் மற்றைய இரண்டு வேட்பாளர்களும் ஐம்பதுவீத வாக்குகளைப் பெற்றிருக்க மாட்டார்கள். நாங்கள் இந்த வாக்குகளை அடுத்த தேர்தலில் பேரம் பேசும் வாக்குகளாகப் பயன்படுத்தியிருக்கலாம் அல்லவா?
அதற்கு சுமந்திரன் இவ் வாறு பதிலளித்தார்: ‘உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதோ தெரியவில்லை. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக நான் இந்தக் கருத்தை பகிரங்கமாக முன்வைத்திருந்தேன்.
ஒரு பகிரங்கக் கூட்டத்தில் நான் இதனைப் பேசியபோது அந்தக் கூட்டத்தில் இருந்த மனோ கணேசனும் அதை ஆதரித்தது பத்திரிகையில் பெரிதாக வந்தது. நான் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்கு இரண்டு அல்ல மூன்று வேட் பாளர்கள் தேவை என்று கூறி யிருந்தேன். ஆனால், அதைப் பற்றி நாங்கள் தீர்க்கமாக யோசித்தபோது பலருடைய கருத்து விசேசமாக சம்பந்தன் ஐயாவுடைய கருத்து அப்படி யான ஒரு பரீட்சார்த்த தேர்தலாக இதனை நடத்த முடியாது.
மகிந்த ராஜபக்ஷவை எந்த விதத்திலும் தோற்கடிக்க வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக இருந்தார்.’ இந்தக் கருத்தை இரண்டா யிரத்து பதினைந்தில் கூறிய சுமந்திரன், இப்போது பரவலாக தமிழ் பொதுவேட்பாளர் பற்றி பேசப்படுகின்ற போது, ‘இந்த யோசனை ராஜபக்ஷக்களை வெல்ல வைப்பதற்கான யோசனை’ என்கிறார்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் இதுவரை மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் ராஜபக்ஷக்களை தோற்கடிப்பதற்காகவே தமிழ் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அப்படி வாக்களித்தும் இதுவரை அதனால் கிடைத்த பலாபலன்கள் நாம் அறிந்தவைதான். இப்போது விழுந்து கிடக்கும், ராஜபக்ஷக்களை மீண்டெழப்பண்ணு வதற்கான முயற்சிதான் இந்த தமிழ் பொதுவேட்பாளர் கோரிக்கை என்கிறார் சுமந்திரன்.
அதாவது, பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடி யாததால், வீழ்ந்து கிடக்கின்றனர் ராஜபக்ஷக்கள். தமிழர் தரப்பு தமது வேட்பாளரை நிறுத்தி சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கைக்காக அவருக்கு வாக்களிக்கச் சொன்னால், ராஜபக்ஷக்கள் அதனை காரணம் காட்டியே மீண்டு எழுந்துவிடுவார்கள் என்ற அவரின் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே இருந்துவிட்டுப்போகட்டும். கடந்த மூன்று தேர்தல்களிலும், எமது கோரிக்கையை வலியுறுத்தி பகிரங்கமாக
வேட்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்தால், அந்த ஒப்பந்தத்தைக் காட்டியே ராஜபகஷக்கள் வெற்றி பெற்றுவிடுவார்கள் என்று கூறிக்கொண்டு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வேட்பாளர்களை ஆதரித்தோம்.
இப்போது அவர்கள் மீண்டு எழுந்துவிடுவார்கள் என்பதற்காக நிபந்தனை இல்லாமல் வேறு ஒருவரை ஆதரிக்க வேண்டும் என்கிறாரா என்பது தெரியவில்லை. இன்று சர்வதேச நாணய நிதியம் விதித்திருக்கின்ற நிபந்தனைகள் மக்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவை அல்ல. ஆனாலும், அதனை ஏற்றுக்கொண்டால் தான் இந்த நாட்டை கொண்டு நடத்தமுடியும் என்று சிங்கள மக்களிடம் நிலைமையைச் சொல்லி வாக்குக்கேட்க, இந்த சிங்களத் தலைவர்களால் முடிகின்றது என்றால், அதனையே இனப்பிரச்னையைத் தீர்த்தால் தான் நாடு முன்னோக்கி செல்லும் என்று சிங்கள மக்களுக்கு எடுத்துச்சொல்லி அவர்களின் சம்மதத்தைப் பெறக்கூடிய தலைவர் ஒருவர் அங்கு வரும்வரை அவர்களில் எவரையும் ஆதரிக்கவேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
ராஜபக்ஷக்கள் எழுந்துவிடக்கூடாது என்று எத்தனை காலம்தான், பூச்சாண்டி காட் டப்போகின்றோம். அவர்கள் படுத்துக்கிடந்தால் என்ன, எழுந்து நின்றால் நமக்கு என்ன வந்துவிடப்போகின்றது? எத்தனை காலம்தான் அவர் கள் எழுந்துவிடாமல் அவர்களை ‘கட்டிப் பிடித்துக் கொண்டு’ நிற்கப்போகின்றோம்?

  • ஊர்க்குருவி.