இப்படியும் நடக்கிறது

0
93

இரண்டாயிரத்து பதினைந்தாம் ஆண்டுத் தேர்தல் நடைபெறு வதற்கு முன்னதாகத் தெற்கில் பல்வேறு சிவில் அமைப்புகள், அரசியல் கட்சிகள் இணைந்து ராஜபக்ஷக்களை தோற்கடிப்பது பற்றி யோசிக்கத் தொடங்கினர். மாதுலுவாவே சோபித தேரர் அவர்களை ஒன்றிணைக்கும் பணியைத் தொடங்கியிருந்தார். அவர் பின்னால் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்தனர். அனைவரின் இலக்கும் ராஜபக்ஷக்களை வீழ்த்துவது என்ற ஒற்றை இலக்கைக் கொண்டதாக மட்டுமே இருந்தது.
இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு தேர்தலில் புலிகளின் பகிஷ்கரிப்பு கோரிக்கையின் உதவியால் பதவிக்கு வந்த மகிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை வெற்றி கொண்ட பின்னர், அந்த வெற்றியின் ‘களிப்பில்’ இன்னும் இரண்டு தசாப்தங்க ளுக்கு தன்னை யாராலும் அசைக்கமுடியாது என்ற எண்ணத்தில் நாட்டில் எவ்வாறான ஆட்சியை செய்தார் என்பதற்கு விளக்கம் தேவையிருக்காது. அவரின் குடும்பத்தினர் தங்களை ஒரு மன்னரின் குடும்பமாக வரித்துக்கொண்டு நடத்திய ஆட்சியே அவர்களை அதிலிருந்து அகற்றவேண்டும் என்ற எண்ணத்தை அனைத்து தரப்பினருக்கும் உருவாக்கியது.
அவர்களுக்கு எதிராக இருந்த மக்கள் உணர்வையே மாதுல வாவே சோபித தேரர் அறுவடை செய்தார். ராஜபக்ஷவை வீழ்த்துவது ஒன்றிலேயே குறியாக இருந்தவர் கள் அவரை வீழ்த்துவதற்காக அவரது முகாமிலிருந்தே ஒருவரை தெரிவுசெய்தனர். மிக இரகசியமாக முன்னெடுக்கப்பட்ட அந்த ‘ஒப்ரேஷனுக்கு’ தலைமை தாங்கியவர் மங்கள சமரவீர. யாரும் எதிர்பாராத வகையில் மகிந்தவின் பாசறையின் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனவை அவர்கள் தேர்வுசெய்தது மகிந் தவை வீழ்த்தும் அவர்களின் குறிக்கு வேண்டுமானால் சரியானதாக இருந்திருக்கலாம்.
ஆனால், அதற்கு பின்னர் அவர்கள் விரும்பிய துபோல அல்லது நினைத்ததுபோல நல்லாட்சியை வழங்குவதற்கு அவர் பொருத்தமானவரா என்பதை அவர்கள் யோசித்திருந்தார் களா என்பது தெரியவில்லை. ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரியை தெரிவுசெய்தவர்கள், அந்த மைத்திரியால் ரணிலுடன் சேர்ந்து பயணிக்கமுடியுமா என் பது பற்றியோ அல்லது அவர்கள் இருவருக்கும் இடையே உறவைத் தொடரமுடியுமா என்பது பற்றியோ யோசித்திருந்தால் அதுபற்றி முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்திருப்பார்கள். இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலே யாரை வெளியேற்றுவதற்காக மைத்திரியை அழைத்து வந்தார்களோ அவரையே மைத்திரி பின்னர் பிரதமராக்கி அனைவரின் முயற்சியையும் கேலிக்கூத்தாக்கினார்.
இவை எல்லாம் பழைய சங்கதிகள்தான். ஆனால், இதனை எதற்காக இப்போது எழுதவேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். அந்தத் தேர்தலில் ராஜபக்ஷக்களை தோற்கடிப்பதற்காக அனைத்துத் தரப்பினரும் ஒன்றாக இணைந்தபோதிலும் அந்த இணைப்பில் சேர்ந்துகொள்ள ஜே. வி. பி. தயாராக இருக்க வில்லை. ஆனால், ராஜபக்ஷக்களை தோற்கடிக்கவேண்டும் என் பதில் மட்டும் ஒற்றுமைப்பட்ட ஜே. வி. பி., அந்த தேர்தலில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகக் கடும் பிரசாரத்தில் ஈடுபட்டபோதிலும் மைத்திரி தலைமையிலான கூட்டணிக்கோ அதன் வேட்பாளரான மைத்திரிக்கு ஆதரவாகவோ பிரசாரம் செய்யவில்லை.
தாம் தமது சார்பில் வேட்பாளரை நிறுத்துவதையும் தவிர்த்துக்கொண் டது. ‘இந்த வீடு பிழையானது என்பதை சொல்லிய அதேவேளை அதற்காக மற்றைய வீடு சரி என்றும் சொல்லமாட்டோம். அது மக்கள் விருப்பம். அவர்கள் விரும்பினால் வாக்களிக்கலாம்’ என் றது ஜே. வி. பி. அதேகாட்சி ஒன்று அடுத்த தேர்தலில் காணப்படலாம் என்கி றார் தெற்கின் ஊடக நண்பர் ஒருவர். ராஜபக்ஷக்களின் பொதுஜன பெரமுன அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்யப்போகின்றது என்பதே இன்று மில்லியன் டொலர் கேள்வியாக இருக்கின்றது.
தமது கட்சி சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்பதில் கட்சியின் பெரும் பாலானவர்கள் விருப்பம் கொண்டுள்ள போதிலும் அப்படியொரு விஷப்பரீட்சையில் இறங்க, மகிந்த ராஜபக்ஷ தயாராக இல்லை என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள். அதனால் தான், ஜனாதிபதித் தேர்தல் குறித்து கட்சியினர் எவரும் பொது இடங்களில் எந்தவொரு கருத்தையும் முன்வைக்கக்கூடாது என்று தனது கட்சியினருக்கு அவர் உத்தரவிட்டிருக்கின்றார். அதேவேளை, கட்சியும் அது தொடர்பான முடிவை எடுக்கும் அதிகாரத்தை மகிந்தவிடம் ஒப்படைத்திருக்கின்றது.
ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை ராஜபக்ஷக்களின் ஆதரவும் தேவை. அதேவேளை அவர்களின் வேட்பாளராகத்தான் களம் இறங்குவதும் தனக்கு பாதகமானது என்ற கணிப்பில் இருக் கிறார். அதனால்தான் அவர் சுயாதீனமான வேட்பாளராகவே களம் இறங்குவார் என்று அவர் தரப்பில் திரும்பத்திரும்ப கூறப்ப டுகின்றது. ராஜபக்ஷக்களின் வேட்பாளராகவோ அல்லது அவர்களின் ஆதரவுடனேயோ போட்டியிட்டால் அது சிறுபான்மையினர் வாக்குகள் தனக்குக் கிடைப்பதைப் பாதிக்கச் செய்யும் என்று ரணில் நினைக்கிறாரெனக் கூறப்படுகின்றது.
இதுதொடர்பான இறுதி முடிவை எடுப்பதற்காகவே, அடுத்த வாரம் ரணில்- மகிந்த- பஸில் சந்திப்பு இடம்பெறவிருக்கின்றது. இந்தச் சந்திப்பில் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அநேகமாக, இரண்டாயிரத்து பதினைந்தாம் ஆண்டு தேர்தலில் ஜே. வி. பி. செய்ததையே இந்தத் தேர்தலில் மகிந்த தரப்பு செய்யலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. ஜே. வி. பியின் கடந்த கால வரலாறுகளை மக்களுக்கு நினை வுபடுத்தும் வேலையை மகிந்த தரப்பு மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளத் தயாராகி வருகின்றதாம். மகிந்தவின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் அம்பாந்தோட்டையில் அவர்களுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுப்பவர்கள் இந்த ஜே. வி. பியினர் என்பதும் கவனிக்கத்தக்கது.

  • ஊர்க்குருவி.