இப்படியும் நடக்கிறது

0
127

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த புதனன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்றும் அந்த உரையில் தான் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிருப்பது குறித்த அறிவிப்பை விடுப்பார் எனவும் முன்னர் எதிர்பார்க்கப்பட் டது.

ஆனால், தான் ஜனாதிபதி பதவி யில் தொடர விரும்புவதை அறிவித்த போதிலும் அது தேர்தல் மூலமா அல்லது பதவி நீடிப்பின் மூலமா என்பதை தெளிவாக அவர் அறிவிக்க வில்லை. அதுபற்றி சில நாட்களுக்கு முன்னர் இந்தப் பத்தியில் எழுதிய போது, இன்று மொனராகலையில் நடைபெறவுள்ள பேரணியில் பலர் மேடையேறுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தேன்.

ஆனால், அப்படி நடக்காது என்கின்றன இன்றைய செய்திகள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னர் சிலருக்கு தான் போட்டியிடுவதான அறிவிப்பை வெளியிடுவார் என்று உறுதியளித்திருந்தார் எனவும் அப்படி அவர் உறுதியளித்தபடி அறிவிப்பை வெளியிடாததால் அந்தக் கூட்டத்தில் மேடையேற சம்மதித்திருந்த பலர் தமது முடிவை அறிவிப்பதையும் அவரைப்போலவே ஒத்திவைத்திருக்கின்றனர் என்றும் இப்போது தெரியவந்திருக்கின்றது.

ரணில் தனது முடிவை அறிவிக் காததற்கு காரணம் இதுவரை தெரிய வரவில்லை. ஆனாலும், தேர்தல் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையாளர் அலுவலகம் எதிர்வரும் பதினெழாம் திகதியே அறிவிக்க இருக்கும் நிலையில், அது வரை அரச செலவில் மக்களுக்கு வழங்கிவரும் கொடுப்பனவுகள் – சலுகைகளை தொடர்ந்து வழங்கு வதன் மூலம் ஒருவகையில் தான் முன்னெடுத்துவரும் தேர்தல் பிரசாரத்தை இன்னமும் இரண்டு வாரங்களுக்கு தொடர்வதற்காகவே என்று ரணில் தரப்பில் தெரிவிக்கப் பட்டாலும் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியோடு ஏற்பட்டுள்ள சில முரண்பாடுகளும் காரணம் என்று கூறப்படுகின்றது.

பெரமுனவை தனித்துக் களம் இறங்குமாறு ரணில் தரப்பில் இருக்கும் சிலர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் – அவரோடு உள்ள வேறு சிலர் பெரமுன இல்லாவிட்டால் தேர்தல் களத்தில் பணியாற்ற பொருத்தமான ஆட்களை தேடிப் பிடிப்பதில் ரணில் ‘சொதப்பி விடுவார்’ என்று அச்சமடைந்திருக்கின்றனர் என்றும் இதனாலேயே அவர் தனது அறிவிப்பை ஒத்திவைத்தாரெனவும் அவருக்கு நெருக்கமான மற்றுமொரு வட்டாரம் தகவல் தெரிவித்தது.

இதேவேளை, பெரமுனவும் ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்க விருப்பதாக தெற்கில் சுவரொட்டி பிரசாரம் ஒன்றை நேற்று முன்தினம் ஆரம்பித்திருந்தது. ரணில் தரப்பையும் சஜித் தரப்பையும் ஓரணியில் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருந்த சிங்கப்பூர் குழுவினர் அண்மையில் விரக்தியுடன் நாடு திரும்பியபோதிலும் இரண்டு கட்சியிலும் உள்ள சில இரண்டாம் நிலைத் தரப்பினர் கடைசி முயற்சியாகக்கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருக்கின்றனர் என்றும் ஒரு செய்தி தெரிவித்தது.

இரு தரப்பும் தனித்தனியாக – எதிரெதிராகக் களம் இறங்குவது இரண்டு தரப்புக்குமே ஆபத்தானது என்று கருதும் இந்த இரு அணியினரும் தமது கடைசி முயற்சியாக சில சந்திப்புகளை நடத்திவருவதும் ரணிலின் அறிவிப்பு தள்ளிப் போனதுக்கு காரணமாக இருக்கலாம் என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள்.

நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலான சிறீ லங்கா சுதந்திர கட்சியின் இரண்டாவது மாநாடு இன்று மொனராகலையில் நடக்கின்றபோது, அங்கு டாக்டர் ராஜித சேனாரத்ன, பாட்டாலி சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா ஆகியோர் மேடையேறு வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இந்தச் செய்தியை ராஜித சேனாரத்ன தனக்கு நெருக்கமான வர்கள் சிலருடன் பகிர்ந்தும் இருந்தார். ஆனால், அவர் போன்ற சிலர் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து அந்த மேடையில் ஏறுவது தமது கடைசிக் கட்ட முயற்சியை பாதிக்கும் என்றும் சஜித் தரப்பிலிருந்து யாரையும் இப்போது பகிரங்கமாக இணைத்துக் கொள்ளவேண்டாம் என்றும் ரணில் கேட்டுக்கொண்டதாலேயே அவர்கள் மேடையேறுவதும் பிற்போடப்பட்டி ருக்கின்றது.

இதேவேளை, சிறீலங்கா பொது ஜன பெரமுனவின் வேட்பாளராகக் களம் இறங்குவார் என்று எதிர்பார்க் கப்படும் பிரபல தொழில் அதிபரும் பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம். பியுமான தம்மிக பெரேராவும் தான் போட்டியிடுவதில் அவ்வளவாக விருப்பம் காட்ட வில்லை என்றும் ரணில் – சஜித் – அநுர என்று மும்முனைப்போட்டி நிலவுமானால் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் தெரிவித்து வருகின்றாராம். அ

வர் போட்டியிட்டால் மாத்திரமே தமது கட்சி சார்பில் ஒருவரை வேட்பளராகக் களம் இறக்கலாம் என்று நினைத்திருந்த பெரமுனவும் யாரை நிறுத்துவது என்பதில் தடுமாற்றத்தில் இருக்கின்ற தாம்.

தமது வேட்பாளரை வெற்றி பெறுவதற்காக நிறுத்தவில்லை என்றும் தமது கட்சியின் பெயரை தக்கவைப்பதற்காகவே போட்டியிட வேண்டும் எனவும் பெரமுன தரப்பில் விரும்பினாலும் அவ்வாறு போட்டியிட வேறு ஒருவரை நிறுத்தினால் அவருக்காக தாமே செலவிட வேண்டிவரும் என்றும் ஆனால், தம்மிக பெரேரா போட்டியிட்டால் தேர்தல் செலவை அவரே கவனித்துக் கொள்வார் எனவும் நம்பியிருந்த பெரமுனவுக்கு அவரின் முடிவு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்ற தாம்.

இதேவேளை, பெரமுனவின் மற்றுமோர் அமைச்சரான காஞ்சன விஜயசேகரவும், மாத்தறையில் ஒரு பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி தனது ‘பலத்தை’ காட்ட விருக்கிறாராம். ரணிலின் பக்கத்தில் இருக்கும் அவர், தனது பலத்தை ரணிலுக்குக் காட்டுவதற்காகவே அந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து வருகின்றாராம்.

என்னதான் நடந்தாலும் அடுத்த பதினேழாம் திகதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வரும் வரை அரசியலில் ஒவ்வொருவரும் தத்தம் பலத்தைக் காட்டி பேரம்பேசலில் ஈடுபடுவதை தடுக்கமுடியாதே.!

ஊர்க்குருவி.