இப்படியும் நடக்கிறது

0
106

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பற்றி பலரும் பல்வேறு கோணங்களில் விமர்சிப்பதுண்டு. அவரை ஒரு தடவை விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், ‘நரியன்’ என்று விளித்து லண்டனில் உரையாற்றியமை பிரசித்தமானது.

அவர், பெரியதந்தையார் ஜே. ஆர். ஜெயவர்த்தனவால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டவர். அவரால் அரசியலில் வளர்க்கப்பட்டதாலோ என்னவோ இவரையும் ஜே. ஆருடன் பலரும் பொருத்திப் பேசுவதுண்டு.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அவரின் ஐக்கிய தேசியக் கட்சி துடைத்து எறியப்பட்டபோது அந்தக் கட்சிக்குக் கிடைத்த ஒரேயொரு தேசி யப் பட்டியல் மூலம் பாராளுமன் றத்துக்குள் வந்து, தனது வழக்கமான அரசியல் காய்நகர்த்தல்களில் இன்று ஜனாதிபதி கதிரையில் இருப்பவர். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எப்படியும் வெற்றிபெற்று மீண்டும் ஓர் ஐந்து ஆண்டுகளுக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக பதவியில் இருக்கவேண்டும் என்பது அவரின் இன்றைய குறி.

அதற்காகவே அவர் தனக்குத் தெரிந்த அத்தனை வழிகளிலும் முயன்று கொண்டிருக்கிறார். இந்தத் தேர்தலில் கடுமையான மும் முனை போட்டி நிலவுவதால், யாருமே முதல்கட்ட வாக்கு எண்ணிக்கையில் ஐம்பது வீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெறமாட்டார்கள் என்றும் இரண்டாம் கட்ட வாக்கு எண் ணிக்கையே யார் ஜனாதிபதி என்பதைத் தீர்மானிக்கும் எனவும் நம்பப்படும் நிலையில் தமிழ் மக்களின் வாக்குகள் முடிவைத் தீர்மானிக்கும் வாக்குகளாக இருக்கும் என்றும் நம்பப்படுகின்றது. அதனால்தான் பிரதான மூன்று வேட்பாளர்களும் வடக்கு – கிழக்குக்கு அடிக்கடி பயணம்செய்து களநிலை மைகளை அவதானிப்பதுடன் தமிழ் மக்களின் வாக்குகளை கவர்வதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களில், வடக்கு – கிழக்கை குறிவைப்பவர்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிக கவனத்தை செலுத்தி வருவதையும் கவனிக்க முடிகின்றது. ஆனால், அவரின் கடைசி பய ணத்தின்போது அவர் நடத்திய சந்திப் புகள், அவரது அரசியல் அறிவையும், அவர்பற்றிய தமிழ் மக்களின் பார்வை யையும் கேள்விக்கு உட்படுத்தியி ருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியலில் இது வரை இலங்கை தமிழ் அரசு கட்சியே முக்கிய கட்சியாக இருந்துவந்தது. அதற்குக் காரணம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து செயல்பட்ட போதிலும் தமிழ் அரசு கட்சியின் வீட்டு சின்னத்திலேயே போட்டியிட்டனர் என்பதும் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று அழைக்கப்பட் டாலும் பாராளுமன்றத்தில் அவர்கள் தமிழ் அரசுக் கட்சியின் எம். பிக்களே.

அந்தக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால், அவ்வாறு அவர்கள் தமிழ் அரசுக் கட்சியின் எம். பிக்களா கவே இன்றும் இருந்துவருகின்றனர். அதனால்தானோ என்னவோ இன்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றதும் தெற்கில் உள்ளவர்களுக்கு தமிழ் அரசு கட்சியே நினைவுக்கு வருகின்றது. எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு தமிழ் அரசு கட்சியை தமக்கு ஆதரவானதாக மாற்றிவிட்டால் போதும் என்றே தெற்கு அரசியல்வாதிகள் இப்போதும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தமிழ் அரசுக் கட்சியே இன்று இரண்டுபட்டு நிற்கின்றது. அதில் ஓர் அணி யாராவது வேட்பாளர் ஒருவ ருடன் ‘டீல்’ போடுவதற்காக ஓடித் திரிந்துகொண்டு, அதற்கு இடையூறாக இருக்கின்றது என்பதற்காகவே தமிழ் பொதுவேட்பாளரை கண்மூடித்தனமாக எதிர்த்துக் கொண்டிருக்கின்றது. இன்னு மோர் அணியோ, தெற்கு வேட்பாளரை ஆதரிப்பது எனில், அவர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்க ளின் இனப்பிரச்னைக்கு தீர்வாக சமஷ்டியை தருவோம் என்று சொன் னால் மாத்திரமே அதனை ஏற்றுக் கொள்ளமுடியும் என்றும் இல்லையேல் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பது எனவும் கூறிக்கொண்டிருக்கின்றது.

இந்த நிலையிலேயே எதிர்வரும் பதினொராம் திகதி, தமிழ் அரசின் மத்திய செயல்குழு கூடி முடிவெடுக்க விருப்பதாகக் கூறியிருக்கின்றது. அந்த ஒரு கூட்டத்தோடு முடிவெடுக்கப் போவதில்லை என்பதும் நமக்கு தெரியா ததல்ல. இந்த இலட்சணத்தில் அவர்கள் இனி முடிவெடுத்து யாரையாவது ஒரு வேட்பாளரை (தெற்கின்) ஆதரிக்கச் சொன்னால்கூட அவர்களின் கதையைக் கேட்டு தமிழ் மக்கள் வாக்களிப்பார்களா என்பது இன்று மில்லியன் டொலர் கேள்வியாக இருக்கின்றது. இந்நிலையில் தமிழ் அரசின் தலைவர் மாவையையும் சுமந்திரனையும் சந்தித்து விட்டால், அவர்கள் சொன்னால் தமிழ் மக்கள் தனக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று ரணில் விக்கிரமசிங்க நம்புகின்றார் என்பது அவரின் அரசியல் ஞானத்தின்மீதே கேள்வியை எழுப்பியிருக்கின் றது. கூடவே,

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு சென்ற ரணில் விக்கிரமசிங்க திருகோணமலையிலும் தமிழ் அரசின் குழு ஒன்றைச் சந்தித்து ‘சுயதிருப்தி’யுடன் கொழும்பு திரும்பியி ருக்கிறார். சம்பந்தன் இயற்கை எய்தியதால் சில மாதங்கள் பாராளுமன்ற உறுப்பினராக பதவிவகிக்கும் அதிர்ஷ்டத்தைப் பெற்ற ஒருவர் தனக்கு விசுவாசமான சிலரை அழைத்து ரணிலுடன் சந்தித்து அவரை திருப்திப்படுத்தியிருக்கிறார்.

திருகோணமலையில் நடந்த அந்தச் சந்திப்பில், மாகாண சபைகளிலிருந்து மத்திய அரசாங்கம் எடுத்த அதிகாரங் களை மாகாணத்துக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது தொடர்பாக மாவை சேனாதிராசா, சுமந்திரன் ஆகியோருடன் உடன்பட் டுள்ளார் என்றும் ஜனாதிபதி அறிவித்தி ருக்கிறார். தமிழர் தரப்பில் யாருடன் உடன்பாடு செய்துகொள்ளவேண்டும் என்பதையே தெரிந்துகொள்ள முடியாத நிலையில் அவர் இருக்கிறாரா? அல்லது அவர்களுடன்தான் உடன்பாடு எட்ட லாம் என்ற நம்பிக்கை அவருக்கு எற் கனவே இருப்பதால்தான் அவர்களுடன் மட்டும் உடன்பாட்டுக்கு போனாரா என்பது தெரியவில்லை. ஏற்கனவே இவர்களுடன் ஓர் உடன்பாட்டுக்கு வந்து, இடைக்கால தீர்வாக வெளி யிட்ட ‘எக்க ராஜ்ய’ உடன்பாட்டுக்கு என்ன ஆனது என்பதையும் அல்லவா சொல்லியிருக்கவேண்டும்.!

– ஊர்க்குருவி.