இப்படியும் நடக்கிறது

0
76

கவிஞர் வாலி ஓர் அறிஞரைப் பார்க்கப் போயிருந்தார். அவர் கேட்டார், ‘வாலி என்று ஏன் பெயர் வைத்திருக்கிறாய்?’ வாலி சொன்னார், ‘இராமாயணத்திலே, வாலி யாரோடு சேர்கிறானோ அவருடைய பலத்தில் பாதி அவனுக்கு வந்து விடுமாம். அதுபோல அறிஞர்களுடன் பழகும்போது, அவர்களின் அறிவில் பாதி எனக்கு வந்து விடுமல்லவா? அதனால்தான் நான் அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தேன்.’ அறிஞர் உடனே கிண்டலாக சொன்னார், ‘அப்படியும் உனக்கு அறிவு வந்ததாகத் தெரியவில்லையே?’ வாலி சிரித்துக் கொண்டே, ‘நான் இன்னும் எந்த அறிவாளியையும் சந்திக்கவில்லையே!’ என்றாராம். கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு எதற்காக ஆதரவளிப்பது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்தது என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாது.

ராஜபக்ஷக்களுக்கு எதிராகத் தமிழ் மக்களின் மனநிலை காணப்பட்டதால் அவர்களுக்கு எதிரான வேட்பாளர்களுக்குத்தான் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்பதைக் கருத்தில் கொண்டே யாருக்கு ஆதரவளிப்பது என்று கூட்டமைப்பும் முடிவு செய்தது. ஆனாலும், ஒவ்வொரு வேட்பாளர்களையும் ஆதரிக்கும் போதும் அவர்களுடன் இரகசிய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதாகவே கூறப்பட்டது. அதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை. அவ்வாறு உடன்படுகின்ற விடயங்களை வெளியே சொன்னால் பெரும்பான்மை சிங்கள மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றே காரணம் சொல்லப்பட்டது. அவ்வாறு சொல்வதற்கும் ஒரு நியாயம் இருப்பதாகவே வெளித்தெரிந்தது. ஆனால், அவ்வாறு சிங்கள மக்களுக்கு சொல்வதற்கு பயப்படுகின்ற எந்த ஒரு சிங்களத் தலைவருமே வெற்றிபெற்றாலும் – அதே சிங்கள மக்கள் விரும்பாத எந்த விடயத்தையும் செய்யப்போவதில்லை என்பதையும் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். அதனால்தானோ என்னவோ, இந்தத் தடவை தமிழ் அரசுக் கட்சியோ சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி தீர்வை ஆதரிக்கும் வேட்பாளர்களுடன் பேச்சு நடத்தி அவர்களை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கின்றது.

அவ்வாறு ஒரு தீர்வை ஆதரிப்பதாக தங்களுக்கு சொன்னால்மட்டும் போதாது, உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அதனை உள்வாங்கவேண்டும் என்றும் தமிழ் அரசு நிபந்தனை விதித்திருக்கின்றது. அவர்களின் இந்த நிபந்தனையை எந்த ஒரு வேட்பாளர்களும் ஆதரிக்கப்போவதில்லை என்பது தெரிந்தது தான். பதின்மூன்றாவது அரசமைப்பு திருத்தத்தை ஏற்றுக்கொள்வதாகக் கூறுகின்ற வேட்பாளர்களே அதிலுள்ள பொலிஸ் அதிகாரத்தையும் தருவதாகக்கூட சொல்லத் தயாராக இல்லை. பதின்மூன்றை முழுமையாக அமுல்படுத்துவேன் என்று சொல்கின்ற சஜித் பிரேமதாஸகூட பொலிஸ் அதிகாரத்தையும் கொடுப்பீர்களா என்று திருப்பிக் கேட்டால், அதனை உறுதியாக சொல்லக்கூடிய நிலையில் இல்லை. இந்த இலட்சணத்தில்தான் சமஷ்டி – சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர்களுடன் பேசுவதற்கு காத்திருக்கப்போகின்றது தமிழ் அரசுக் கட்சி. கடந்த மூன்று தேர்தல்களிலும் தமிழ் மக்களின் வாக்குகள் வெற் றுக்காசோலையாக பயன்படுத்தப் பட்டதாகக் கூறிக்கொண்டு இந்தத் தடவையும் தமிழ் மக்களின் வாக்குகளை ஒருசில அரசியல் தலைவர்கள் தமது விருப்பப்படி விற்பதற்கு இடமளிக்கக்கூடாது என்று தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களம் இறக்குவதற்கு சிவில் சமூகப் பிரதிநிதிகள் முயற்சி செய்தபோது அதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாத தெற்கின் பிரதான வேட்பாளர்கள் மூவருமே, இப்போது சற்றுப் பதற்றமடைந்து விட்டதை உணரமுடிகின்றது. அதிலும், குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே அதிகம் அக்கறைப்படுகிறாரெனத் தெரிகின்றது.

அதனால்தான், அவர் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் பிரதிநிதிகளை பேச்சுக்கு அழைத்திருந்தார். தமிழர் விவகாரம் என்றால் எப்போதுமே ஒருவரோடு மாத்திரமே ‘டீல்’ போட்டுப் பழக்கப்பட்டவர் ரணில் விக்கிரமசிங்க. அதனால் தானோ என்னவோ தமிழர் விவகாரம் என்றதும் அவரோடே பேசி முடிவுக்கு வந்துவிடலாம் என்ற பழைய நினைப்பில் இருந்த அவருக்கு இப்போதுதான் தமிழர் அரசியலில் நடந்துகொண்டி ருக்கும் மாற்றங்களைப் புரிந்து கொள்ள முடிந்திருக்கின்றது போலும். பொதுவேட்பாளர் விடயம் குறித்து எப்போதுமே நகைப்புக்கிடமான ஒரு விடயமாகப் பேசிவந்த அவரின் கருத்தைக் கேட்டு, அது சாத்தியமாகாது என்றே நம்பிக்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில், இப்போது தன்னைச் சுதாகரித்துக்கொண்டு பொதுவேட்பாளர் பற்றி யோசிக்கத் தொடங்கியிருக்கிறார். அவருடைய அழைப்பை இப்போது பொதுக்கட்டமைப்பு நிராகரித்து விட்ட பின்னர் அடுத்து என்ன நடக்கின்றது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் பற்றி சொல்ல வந்த இடத்தில் வேறு திசைக்கு சென்று விட்டது பத்தி, அந்தக் கூட்டம் முடிந்து ஒரு சிரேஷ்ட தலைவரிடம் கூட்டம் பற்றிக் கேட்டபோது அவர் சொன்னார், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான வேட்பாளர்களுடன் பேச்சு நடத்துவதற்கு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கட்சியின் பேச்சாளர் சொன்னார் வடக்கு – கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வுடைய ஆட்சி முறையை வழங்கத் தயாராக உள்ள ஜனாதிபதி வேட்பாளர் அந்த நிலைப்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சிங்கள மக்களுக்கும் வெளிப்படுத்தத் தயாராக இருந்தால் அவருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி தீர்மானிக்கும். இன்றுள்ள நிலையில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர்தான் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் இருக்கிறார் என்பது குழந்தைக்கும் தெரிந்த ஒன்று. தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிப்பதற்கு தமிழ் அரசுக் கட்சி தயாராகிவருகின்றது என்று நம்புவோம்.!

ஊர்க்குருவி.