28 C
Colombo
Tuesday, September 17, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது!

அண்மையில், கொழும்பில் சில அரசியல் பிரமுகர்களுடன் பேசிக் கொண்டிருந்தோம். அவர்களில், நல்லாட்சி அரசாங்கம் அமைவதற்கு முன்னதாக ராஜபக்ஷக்களுக்கு எதிராக பொது வேட்பாளர் ஒருவரைக் களம் இறக்குவதற்காக அயராது உழைத்தவர்கள் சிலரும் இருந்தனர். அவர்களில், ஒருவர் அப்போது நடந்த சம்பவம் ஒன்றை ஞாபகப்படுத்தினார். அவ்வாறு ராஜபக்ஷக்களுக்கு எதிராகப் பலமான பொதுவேட்பாளர் ஒருவரைக் களம் இறக்குவதற்காக தீவிரமாக பணியாற்றியவர் மாதுளவேவ சோபித தேரர் என்பது நமக்கு தெரிந்ததுதான்.

அந்தக் காலத்தில் மாதுளவேவ சோபித தேரர் தலைமையில் ஒரு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. கூட்டத்தில் முக்கிய கட்சிகள் அனைத்தினதும் தலைவர்கள் இருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தானே அந்தத் தேர்தலில் பொது வேட்பாளராக களம் இறங்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். ‘ஏற்கனவே இரண்டாயிரத்து பத்து தேர்தலில் பலரின் வேண்டுகோளின் பேரில் நான் விட்டுக்கொடுத்து சரத் பொன்சேகாவை வேட்பாளராக்க சம்மதித்தேன். ஆனால், அவரால் வெற்றிபெறமுடியவில்லை. இந்தத் தடவை என்னால் வெற்றிபெறமுடியும்’ என்று ரணில் விடாப்பிடியாக நின்றார்.

அங்கே இருந்தவர்கள் எல்லோரும், ரணில் சரியான தெரிவு அல்ல என்று எவ்வளவு சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. கடைசியில் அந்தக் கூட்டத்தில் நேரடியாக கலந்துகொள்ளாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் கருத்தை அறிவது என்று தீர்மானிக்கப்பட்டு அவருக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டது. தொலைபேசியில் முதலில் அங்கே என்ன நடக்கின்றது என்பதைப் பற்றி விளக்கமளித்த பின்னர் அவரின் கருத்து கேட்கப்பட்டது. தொலைபேசி இப்போது அவர் பேசுவதை அனைவரும் கேட்கும் வகையில் ‘ஸ்பீக்கர் போன்’ போடப்பட்டிருப்பது பற்றியும் சம்பந்தனுக்கு சொல்லப்பட்டது. தான் சொல்வதை ரணிலும் கேட்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டே சம்பந்தன் பதிலளித்தார். ‘மிஸ்டர் விக்கிரமசிங்க…’ என்று ஆங்கிலத்தில் தொடங்கிய சம்பந்தன் சொன்னார்: ‘எங்களுக்கு கிடைக்கின்ற தகவல்கள் நீங்கள் போட்டியிட்டால் வெற்றிபெற முடியாது என்றே தெரிவிக்கின்றன.

இந்தத் தடவையும் நாங்கள் தோல்வி அடைகின்ற வேட்பாளருடன் நிற்க முடியாது. நீங்கள்தான் கேட்பீர்கள் என்றால், நாங்கள் வேறு தெரிவை நாடவேண்டியிருக்கும்’. சம்பந்தனின் அந்தத் தொடர்பு துண்டிக்கப்பட்டதும், ரணில் ‘சரி நீங்களே பொருத்தமான வேட்பாளரை கண்டு பிடியுங்கள்’ என்று அன்றைய கூட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாராம். இந்தச் சம்பவத்தை அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரமுகர் ஒருவர் சொன்னபோது, அவர்களிடையே இருந்த ஒரேயொரு தமிழரான இந்த ஊர்க்குருவிக்கு சற்று பெருமையாகவே இருந்தது. இந்தச் சம்பவம்தான் அந்தச் செய்தியை படித்தபோது ஞாபகத்துக்கு வந்தது. தமிழ் அரசு கட்சியின் மத்திய செயல்குழு நேற்றுமுன்தினம்கூடி, பல விடயங்கள் குறித்தும் ஆராய்ந்திருந்தது. அதில் ஒன்று, கட்சியின் வழக்கு சம்பந்த மானது.

வழக்கை எதிர்கொண்ட பின்னர் இதுவரை கட்சியின் இந்த மத்திய குழு பல தடவைகள் கூடிக்கலைந்திருக்கின்றது. ஒவ்வொரு தடவையும் அவர்கள் ஒவ்வொரு முடிவை இந்த வழக்கு சம்பந்தமாக எடுத்துக் கொண்டிருக்கின்றனரோ என்று கேட்காமல் இருக்கமுடியவில்லை. கடைசியாகக் கட்சி யாப்பின் படி தொகுதிக் கிளைகளிலிருந்து தெரிவு செய்யப்படும் பொதுச் சபையின் மூலம் புதிய தலைவர், செயலாளர், நிர்வாகிகளைத் தெரிவுசெய்வதென்று கடைசிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கட்சியின் யாப்பின்படி மூலக்கிளைகளிலிருந்து தான் தொகுதிக்கிளைக்கு பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட வேண்டும். அப்படியெனில், மூலக்கிளைகளிலிருந்தே தெரிவுகள் தொடங்கவேண்டும் என்கின்றனர் ஒரு தரப்பினர். மற்றைய தரப்பினரோ, அப்படியில்லாமல் தொகுதிக்கிளைகளிலிருந்து தொடங்குவோம் என்கின்றனர்.

இந்தச் சமாச்சாரம் முடிவுக்கு வரும்போலத் தெரியவில்லை. சிலவேளை தொகுதிக்கிளைக்கு புதியவர்கள் தெரிவு செய்யப்படும் போது, அந்தத் தெரிவும் பிழையானது என்று தொகுதிக்கு ஒருவர் நீதிமன்றம் போவார்களோ தெரியவில்லை. அடுத்து முக்கியமாக நாம் சொல்ல வந்தது. ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதில் தமிழ் அரசு நேற்று முன்தினம் எடுத்துள்ள முடிவு பற்றியது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்ட பின்னர் மத்தியகுழு கூடி ஆராய்ந்து யாருக்கு ஆதரவளிப்பதென முடிவு எடுப்பது என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. ஏற்கனவே, இதற்கு முன்னர் நடந்த மத்திய குழுக்கூட்டத்தில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி தீர்வை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடுகின்றவர்களை ஆதரிப்பது என்று முடி வெடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

ஆனால், இந்தக் கூட்டத்தில் அது பற்றி விளக்கமாக சொல்லப்படாவிட்டாலும் தேர்தல் அறிக்கைகளை ஆராய்ந்து முடிவெடுப்பது எனில் முதலாவது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இன்னமும் அப்படியே இருக்கின்றது என்றே நம்புவோம். ஆனால், நேற்றுமுன்தினம் கூட்டம் நடப்பதற்கு முன்னதாகவே கட்சியின் பேச்சாளரான, சுமந்திரன் எம். பி., ‘கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் தேர்தலுக்கு அண்மித்த காலத்தில் தான் எமது நிலைப்பாட்டை அறிவித் தோம். இந்த தடவை அது ஒரு வித்தி யாசமாக வரவேண்டும் என்ற எந்த தேவையும் கிடையாது’ என்று தெரிவித் திருந்தார். அதாவது, கடந்த தேர்தல்களில் எல்லாம் எப்படி முடிவெடுத்தோமோ அதேபோலத்தான் இந்தத் தேர்தலிலும் முடிவெடுப்போம் என்கின்றாரோ தெரியவில்லை.

ஆனால், நேற்றுமுன்தினம் கூட்டம் முடிந்ததும் வேட்பாளர்களின் அறிக்கை வெளிவரும்வரை தென்னிலங்கையின் பிரதான கட்சிகளின் பேச்சாளர்களுடன் பேச்சுகளை முன்னெடுப்பது என்றும் முடிவு எட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இப்போதுதான் மேலேயுள்ள சம்பந்தனின் கதை ஞாபகத்துக்கு வந்தது. அத்தனை ஆளுமையுடன் இருந்த சம்பந்தன் பேச்சு நடத்தியே ஒவ்வொரு பொங்கலுக்கும் தீபாவளிக்கும் காத்திருக்கவேண்டியிருந்தது. இந்நிலையில், வேட்பாளர்கள் எவருமே இவர்களைக் கண்டுகொள்ளாமலே போய்க்கொண்டிருக்கின்றபோது இவர்கள் பேசப் போகின்றார்களாம். பொறுத் திருந்துவிட்டோம். இன்னும் கொஞ்சம் பொறுத்துத்தான் பார்ப்போமே.

ஊர்க்குருவி.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles