28 C
Colombo
Tuesday, September 17, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது!

அமெரிக்காவின் பிரபல எழுத்தாளரான மார்க்ட்வைன் இளைஞராக இருந்தபோது ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அங்கு பணியில் சேர்ந்த ஆறு மாதம் கழிந்த பின், அந்த நிறுவனத்தின் முகாமையாளர் அவரை அழைத்து வேலையிலிருந்து நிறுத்துவதாகக் கூறினார்.

காரணம் என்னவென்று வினவியபோது, முகாமையாளர் சொன்னார், ‘நீ ஒரு சரியான சோம்பேறி. நீ இந்த நிறுவனத்துக்கு லாயக்கில்லை.’ மார்க்ட்வைன் உடனே சொன்னார், ‘நீங்கள்தான் சரியான சோம்பேறி’ என்று. முகாமையாளருக்கு கோபம் வந்தது. தன்னை ஏன் அவ்வாறு கூறினார் என்று கேட்க, ட்வைன் சொன்னார்: ‘நான் ஒரு சோம்பேறி என்பதைக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஆறு மாதம் ஆகியிருக்கிறதே? நீங்கள் ஒரு சோம்பேறி என்பதை நான் வேலையில் சேர்ந்த அன்றே தெரிந்து கொணடேன்.’

இந்தக் கதைக்கும் இனி எழுதப் போகின்ற விடயத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இடையிடையே இப்படி ஒரு கதையுடன் தொடங்காவிட்டால் என்ன கதையைக் காணவில்லை என்று சில வாசகர்கள் குறைப்பட்டுக்கொள்வதால் ஒரு கதையைத் தந்திருக்கின்றேன். அண்மையில், கொழும்பில் சில முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்தபோது அவர்கள் தெரிவித்த கருத்து ஒன்றை நேற்றைய பத்தியில் தந்திருந்தேன்.

அந்தச் சந்திப்பில், தெற்கு தேர்தலில் களநிலவரம் எப்படியிருக்கின்றது என்பதை அறிய அவர்களுடன் பேசிய போது கிடைத்த தகவல்களை இன்று உங்களோடு பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன். அவர்களில் ஒருவர், தேர்தல் காலங்களில் கருத்துக்கணிப்புகளை நடத்துவதில் அனுபவமுள்ளவர்.

அவர் எப்போது கண்டாலும் ஜே. வி. பியே முன்னணியில் இருக்கின்றது என்று சொல்வார். அப்போது போட்டி அநுரவுக்கும் சஜித் பிரேமதாஸவுக்கும்தான் என்று அவர் சொல்கின்றபோது, ஆச்சரியமாக இருக்கும். இதுகாலம் வரை மூன்று வீத வாக்குகளுடன் இருந்த ஒரு கட்சி திடீரென்று பத்து மடங்கு அதிக ஆதரவைப் பெறுவது சாத்தியமா என்று எனக்குள் கேட்டுக்கொண்டதும் உண்டு. அவரிடம் இப்போது நிலைமை எப்படி? என்று கேட்டபோது, அவர் சொன்னது மிகச்சுருக்கமாக இருந்தது. முதலாம் இடத்துக்கு ‘அவர்கள்’ இருவருக்குமிடையே போட்டி. மூன்றாம் இடத்துக்கு ‘இவர்கள்’ இருவருக்குமிடையே போட்டி என்றார்.

அது எப்படி முதலாமிடத்தில் இருந்தவர், மூன்றாமிடத்துக்குக்கூட இப்போது போட்டிபோட வேண்டியிருக்கின்றது என்று அவரிடமே கேட்டேன். அவர் சொன்னார், அவர்கள்தான் பிரசாரம் தொடங்கியதும் ஒவ்வொரு நாளும் ஒரு குண்டைப் போட்டு தங்களைத் தாங்களே கெடுத்துக் கொள்கின்றார்களே என்று. கோட்டாபய ஆட்சி அமைத்ததும் அவர் முதலில் செய்தது, ‘வற்’ (பெறுமதிசேர் வரி) வரியை இல்லாமல் செய்தது. சிறிய மற்றும் நடுத்தர முதலாளிகளின் ஆதரவைப் பெறுவதற்காக அந்த வரியை இரத்துச் செய்வேன் என்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவர் அதனை உறுதியளிக்கப்போய், ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக அதனை அவர் இரத்து செய்தார்.

ஒவ்வொரு பொருட்களின் மீதும் விதிக்கப்படும் இந்த வரியை கோட்டாபய இரத்துச் செய்தாலும் பொருட்களின் மேல் இருந்த வரி இரத்துச் செய்யப்பட்டபோதும் அந்தப் பொருட்களின் விலை குறையவில்லை. இதனால் இலாபம் அடைந்தவர்கள் என்னவோ முதலாளிமார்தான். ஆனால், நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, கோட்டாபய வரியை இரத்துச் செய்ததால்தான் நாடு இந்த நெருக்கடியை எதிர்கொண்டது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும், ஜே. வி. பியும் குற்றம்சாட்டின.

ஐக்கிய மக்கள் சக்தியின் நிழல் நிதி அமைச்சரான கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும் ஜே. வி. பியின் நிழல் நிதி அமைச்சரான சுனில் ஹந்துநெத்தியும் மாறிமாறி இதையே கூறிக்கொண்டிருந்தார்கள். ஆனால், ஜே. வி. பியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய அதன் பிரதித் தலைவரான விஜித ஹேரத், தாம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதும் பாராளுமன்றம் மறுநாளே கலைக்கப்படும் என்றும் புதிய பாராளுமன்றம் அமைந்து தமது கட்சி ஆட்சியில் அமரும்போது வற் வரியை இரத்துச் செய்வோம் என்றும் அறிவித்திருக்கிறார். கோட்டா இதனைச் செய்ததால்தான் நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது என்றவர்கள், தாம் ஆட்சிக்கு வந்தாலும் இரத்துச் செய்வோம் என்கின்றனர்.

அவர் இவ்வாறு அறிவித்த சில நாட்களிலேயே, ஜே. வி. பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹரினி அமரசிங்க, தாம் ஆட்சியில் அமர்ந்ததும், கண்டி தலதாமாளிகையில் நடைபெறும் கண்டி பெரஹராவையே தடை செய்வோம் என்று அறிவித்திருக்கிறார். இப்படியே போனால், மீண்டும் பழைய இடத்துக்கு வந்துவிடுவார்களோ தெரியவில்லை என்றார் அவர்.அவரோ தற்போதைய ஜனாதிபதி யும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மீது எப்போதும் விமர்சனத்தை முன் வைக்கின்ற ஒருவர். ஆனால், அவர் சொன்னார், இவர்கள் இழக்கின்ற ஒவ்வொரு வாக்கையும் அவர் பெற்றுக் கொண்டிருக்கிறார் என்று.

ராஜபக்ஷக்களின் பக்கத்தில் என்ன நடக்கின்றது என்று கேட்டேன். தமது கட்சியை விட்டு வெளியேறி, ரணிலுடன் இணைந்துகொண்ட தொண்ணூறுக்கும் அதிகமான எம். பிக்களை தனித்தனியாக அழைத்து ஒவ்வொருவராக பேசிக்கொண்டிருக்கிறாராம் பஸில் ராஜபக்ஷ. ஒவ்வொருவருடனும் நீண்டநேரம் பேசும் அவர், ஒவ்வொருவருக்கும் தாம் தனிப்பட்ட ரீதியில் செய்த உதவிகளை எல்லாம் ஞாபகப் படுத்தி, தமது பக்கத்துக்கு மீண்டும் அழைப்பதற்காக முழு நேரத்தையும் செலவிடுகிறாராம். தேர்தல் முடிவடை வதற்கு முன்னர் பத்துப் பேராவது அந்தப் பக்கம் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார் அந்தப் பிரமுகர்.

ஊர்க்குருவி.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles