இப்படியும் நடக்கிறது!

0
72

ஊர்காவற்றுறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் பண்டிதர் கா. பொ. இரத்தினம். முன்னர் தமிழ் அரசு கட்சியின் எம். பியாகவும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் எம். பியாகவும் இருந்தவர். தமிழ் அறிஞரான அவர் திருக்குறளின் பெருமைகளை உலகறியச் செய்வதற்காக உழைத்தவர். தொடர்ச்சியாக திருக்குறள் மாநாடுகளை உலகம் எங்கும் நடத்தியவர். எழுபதுகளின் கடைசிக் காலத்தில் வேலணையில் ஒரு திருக்குறள் மாநாடு. மூன்று நாட்கள் நடந்த அந்த மாநாட்டில் ஒருநாள் நடைபெற்ற கவியரங்கில் ஓர் இளம் கவிஞர் கவிதை பாடிக் கொண்டிந்தபோது மாநாட்டு மண்டபத்தில் சலசலப்பு. மாநாட்டின் தொண்டர்கள் கவிதை படித்துக்கொண்டிருந்த கவிஞரை, குண்டுக்கட்டாகத் தூக்கிக்கொண்டுபோய் மாநாட்டு மண்டபத்திலிருந்து வெளியேற்றினர்.

அவர் படித்த கவிதையில் ‘கேட்டது தமிழீழம், கிடைத்தது ஜீப் வண்டிகள்…’ என்ற வரிகள் மட்டும் இப்போதும் ஞாபகத்தில் உண்டு. அப்போது ஜே. ஆர். ஜனாதிபதியாக இருந்தார். அவரே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வரிகள் இல்லாது வாகனங்களை வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தவர். அப்போது எம். பிக்கள் எல்லோருக்குமே ஒரே மாதிரியான ஜீப் வண்டிகள் வரியில்லாது வழங்கப்பட்டன. அதற்காக அவை இலவசமாக வழங்கப்படவில்லை. வரிகள் மாத்திரமே சலுகையாக வழக்கப்பட்டன. அவற்றை வெளிநாட்டில் வாங்கிக் கொண்டுவந்து சேரும்வரையான விலைக்கு வழங்கப்பட்டதுடன் அவர்களின் சம்பளத்திலிருந்து அவை கட்டுப் பணத்துக்கு வழங்கப்பட்டன. பண்டிதர் கா. பொ. இரத்தினம் பின்னர் தமது அன்றாட அலுவல்களை அந்த ஜீப் வண்டியில் ஓடி ஓடியே கவனித்து வந்தார். அந்த நடைமுறை பின்னர் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.

பிற்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாகனங்களை இறக்குமதி செய்துகொள்வதற்கான ‘பெர்மிட்’ டுகள் மட்டுமே வழங்கப்பட்டன. நமது எம். பிக்களோ அவற்றை வேறு ஒருவருக்குக் கொடுத்து பல கோடி ரூபாய்களை – அதாவது, அவர்களுக்கு கிடைக்கும் வரிச் சலுகையை தமக்கான வருமானமாகப் பெற்றுவந்தனர். நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கிய பின்னர் கோட்டாபய ஆட்சிக் காலத்தில் – அதாவது கடந்த பாராளுமன்றத்தில் மட்டுமே உறுப்பினர்களுக்கு அதற்கான ‘பெர்மிட்’ வழங்கப்படவில்லை.

இப்போது, அதனை ஈடுசெய்யும் வகையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம். பிக்களுக்கு மதுபானசாலைகளுக்கான அனுமதி வழங்கியமை பற்றியே இன்று அதிகம் பேசப்படுகின்றது. மதுபானசாலை பற்றி பேசுகின்றபோது சில வருடங்களுக்கு முன்னர் நமது தலைவர் ஒருவர் பகிரங்கமாக விடுத்த கோரிக்கை ஒன்று ஞாபகத்துக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்து விட்டது என்றும் அதனைத் தடுப்பதற்காக கிளிநொச்சியில் மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கவேண்டும் எனவும் அந்த மக்கள் பிரதிநிதி கோரிக்கை விடுத்தார். அப்போது, கிளிநொச்சியில் மதுபானசாலைகள் எதுவும் இருக்கவில்லை. அதாவது, மதுப்போத்தல்கள் விற்பனை செய்யும் வியாபார நிலையங்கள் இருக்கவில்லை.

அவர் அப்போது இப்படியொரு கோரிக்கையை முன்வைத்தபோது யாரும் அது தவறு என்று கண்டிக்கவில்லை – ஏன் கண்டுகொள்ளவே இல்லை. அதற்குக் காரணம் கிளிநொச்சி மாவட்டம் முழுவதும் நடந்து கொண்டிருந்த கசிப்பு உற்பத்தி தான். தமிழ் எம். பிக்கள் சிலருக்கு இந்த மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை ரணில் வழங்குவது பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கியதும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனிடம் கேட்டேன், உங்களுக்கும் கிடைத்ததா? என்று. இது பற்றி இந்தப் பத்தியிலும் முன்னர் எழுதியதாக ஞாபகம். அதற்கு அவர் சொன்னார், ‘என்னிடமும் கேட்டார்கள்தான்.

ஆனால், பாராளுமன்றத்தில் இருக்கும் இருநூற்றி இருபத்தி ஐந்து எம். பிக்களுக்கும் கொடுக்கப்படுகின்றது என்றால் நான் வாங்கிக்கொள்கின்றேன்’ என்று சொன்னாராம். ஆனால், ஒரு சிலருக்கு மாத்திரம் சலுகையாக கொடுக்கப்படுகின்றது என்றால், அதன் அர்த்தம் அவர்கள் அவரிடமிருந்து எதையோ எதிர்பார்க்கிறார்கள் என்பதுதான். இப்போது யாரைப் பார்த்தாலும், அதுபற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில் இவ்வாறு லைசன்ஸ் பெற்றவர்களின் பெயர் விபரங்களை வெளியிடவிருப்பதாக ஒரு செய்தி வெளிவந்திருந்தது. அந்தச் செய்தி வெளி வந்த பின்னர், தமிழ் அரசுக் கட்சி யின் முன்னாள் எம். பி. சி. சிறீதரன் புதிய ஜனாதிபதி அநுரவை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்ததும் அந்தச் சந்திப்புக்கும் மதுபானசாலை லைசென்ஸூக்கும் முடிச்சுப் போட்டு சமூகவலைத்தளங்களில் பலரும் எழுதிவருகின்றனர்.

ஆனால், அந்தச் சந்திப்புக்கு இரு தினங்களின் பின்னர், தமிழ் அரசின் மற்றுமொரு மாஜி எம். பியான சுமந்திரனும் புதிய ஜனாதிபதியைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். இந்த வேளையில்தான், ஒரு மூத்த ஊடகர் தனது முகநூலில், ‘வடக்கில் முன்னாள் உறுப்பினர் …… ஒருவரைத் தவிர மற்றைய அனைவரும் சாராயக் கடை அனுமதி பெற்றவர்களாம்’ என்று பதிவிட்டிருக்கிறார். காருக்கு ‘பெர்மிட்’ எடுத்தது போல இவர்கள் ‘பாருக்கு பெர் மிட்’ எடுத்திருக்கிறார்கள் என்று இதனை இனிக் கடந்து போகவேண்டியதுதான். காருக்கு பெர்மிட் கொடுப்பது அவர்கள் புதிய வாகனத்தை வாங்கி, தனது மாவட்டம் முழுவதும் ஓடித் திரிந்து மக்கள் பணியாற்றவேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், அதனைச் செய்யாமல் அதனை காசாக்கியபோது கண்டுகொள்ளாத நாம் இப்போது மட்டும் எதற்காம்?

-ஊர்க்குருவி.