இப்படியும் நடக்கிறது!

0
69

‘ஒரு கல்லில் இரு மாங்காய்’, என்று கூறுவார்கள். அதாவது, காய்த்து நிற்கும் மாங்காய் மரம் ஒன்றின்மீது ஒரு கல் எறிந்தபோது இரண்டு மாங்காய்கள் விழுந்தால் என்பதுபோல. தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயல்குழு ஒருதடவை கூடி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்த தமது கட்சிக் காரர்களுக்கு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்குவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றியது. அந்தக் கூட்டத்திலேயே மற்றுமொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு முன்னர் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றியடையாமல் தோல்வியடைந்தவர்களுக்கும் நியமனம் வழங்குவதில்லை என்பது அந்த மற்றைய தீர்மானம். முதல் தீர்மானம் முக்கியமாக குறிவைத்தது சிறீதரனை. இரண்டாவது மாவையருக்கு வைக்கப்பட்ட பொறி. இந்த இரண்டு தீர்மானங்களையும் முழுமையாக நடைமுறைப்படுத்துவதென்றால், சிறீதரனுக்கும் போட்டியிட அனுமதி வழங்கியிருக்கக்கூடாது. ஆனால், அப்படி நடந்தால் என்ன நடக்கும் என்பதை சில தமிழ் அரசு முக்கியஸ்தர்கள் கூட்டம்போட்டு ஆராய்ந்திருக்கிறார்கள். சிறீதரன் கட்சியை விட்டு வெளியேறி சுயேச்சையாக போட்டியிட்டாலும் அவர் வெற்றிபெறுவார்.

‘அவரது வாக்குகள் இல்லையென்றால், தமிழ் அரசு தேறாது’, என்பது பலரின் கருத்தாக இருக்க, ஒன்றை கைவிட்டு விட்டு மற்றையதை மாத்திரம் கையில் எடுத்தாலே போதுமானது என்று ஆலோசனை வழங்க, ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல ஒரு தீர்மானத்தை மட்டும் கையில் எடுத்திருக்கிறார்கள். அதாவது, ஏற்கனவே போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களுக்கு இந்தத் தடவை போட்டியிட அனுமதி வழங்காவிட்டாலேயே, இந்த பொது வேட்பாளரை ஆதரித்தவர்கள் (சிறீதரன் தவிர்த்து) ஏனைய அனைவரும் ‘அவுட்’ ஆகிவிடுவார்கள்.

இதனாலேயே, பொது வேட்பாளரை ஆதரித்தவர்கள்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது என்றும் ஏற்கனவே கேட்டு தோற்றுப்போனவர்களை இம்முறை போட்டியிட அனு மதிக்காவிட்டாலேயே போதும் என்றும் முடிவெடுக்கப்பட்டு விட்டது. இந்த விடயங்களை தமிழ் அரசின் முன்னாள் எம். பி. ஒருவர் இந்த ஊர்க்குருவிக்கு
விளக்கமளித்துக் கொண்டிருந்தார். அவர் பொதுவேட்பாளரை ஆதரித்தவர் மட்டுமல்ல, கடந்த முறை கேட்டுத் தோற்றுப்போன முன்னாள் எம். பி. அவரிடம் கேட்டேன், ‘கடந்த பாராளுமன்ற தேர்தலில் கேட்டு தோற்றுப்போனவர்களுக்கு இந்தத் தடவை சந்தர்ப்பம் கொடுப்பதில்லை என்றால், கடந்த முறை கேட்டு தோற்றுப்போன திருகோணமலை குகதாசனுக்கும் கொடுக்கக்கூடாதே.

அவரும் தோற்றவர்தானே? சம்பந்தன் ஐயா இன்றும் உயிருடன் இருந்திருந்தால், அவர் எம். பி. ஆகியிருக்கமாட்டார்தானே?’. அவர் உடனே சொன்னார், ‘அட எனக்கு இந்த யோசனை வரவில்லையே’ என்று. இதுவல்ல இன்று நாம் சொல்ல வருவது: தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்தவர்களை பழிவாங்கத்தான் இந்த முடிவு எடுக்கப்பட் டது என்பது சிறுகுழந்தைக்கும் தெரிந்த விடயம். ஆனால், தமது கட்சியின் வருங்காலத் தலைவரே பொதுவேட்பாளரை ஆதரிக்க முடிவெடுத்த பின்னர், கட்சியின் தற்போதைய தலைவரும் தமிழ் அரசின் தலைவர்களிலேயே இன்றும் உயிரோடு இருப்பவர்களில் மூத்தவருமான மாவை சேனாதிராசாவே, தான் தனது வாக்கை பொது வேட்பாளருக்குத்தான் போடுவேன் என்று பகிரங்கமாகக் கூறி ஆதரவு தெரிவித்த பின்னர், அவர்கள் வழியில், அதாவது, மூத்த தலைவர், வருங்கால தலைவர் இருவரினதும் வழியில் செல்ல முற்பட்ட தலைவர்கள்- அவர்கள் கடந்த தேர்தலில் வெற்றிபெறவில்லை என்றாலும் இந்தத் தேர்தலில் வெற்றிபெறக்கூடியவர்களை போட்டியிட முடியாதவாறு தடுத்து வைத்திருக்கின்றபோது, அதனை கண்டும்காணாமல், தான் போட்டியிட சந்தர்ப்பம் வந்துவிட்டதுதானே என்று சிறீதரன் கண்டும்காணாமல் கடந்து செல்வது ஓர் ஆளுமையுள்ள தலைவருக்கு சரியானதாக இருக்காது.

இந்த விடயத்தில் தன்னோடு இருந்தவர்களை- தன் அடியொற்றி அரசியலில் நடந்தவர்களை கண்டும் காணமல் நகர்ந்துசெல்வது அவரது ஆளுமைமீதே கேள்வி எழுப்பும் என்பதையும் அவர் புரிந்துகொள்ளவேண்டும். இந்தப் பத்தியை எழுதி முடித்த பின்னர்தான் தமிழ் அரசின் யாழ்ப்பாண பட்டியல் வெளியாகியிருந்தது. அதில் முன்னாள் யாழ். முதல்வர் ஆனல்ட் பெயரும் இடம்பெற்றிருப்பதை கண்டபின்னர் தமிழ் அரசின் முக்கிய நபர் ஒருவரிடம் கேட்டேன். கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர் களுக்கு இடம் இல்லையெனில் அவருக்கு எப்படி? என்று. அவர் அதற்கு புது விளக்கம் ஒன்று தந்தார்: ‘ஏற்கனவே எம்.பியாக இருந்து போட்டியிட்டு தோற்றவர்களுக்குத்தான் நியமனம் இல்லை’ என்று. ‘இரண்டாயிரத்து பதின்மூன்றுக்கு பின்னர் நடந்த தேர்தல்களில் எல்லாம் (நல்ல வேளை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் அரசு போட்டியிடவில்லை) தமிழ் அரசின் வேட்பாளர் பட்டியலில் ஆனல்ட்டுக்கு இடம் கொடுக்கப்படுகிறதே. தமிழ் அரசுக்கு ஆட்களுக்கு அத்தனை தட்டுப்பாடா? அல்லது சேருக்கு விருப்பு வாக்குக்கு உதவக்கூடிய வர் என்பதாலா? ‘என்று அவரி டம் கேட்காமல் இருக்கமுடியவில்லை.

  • ஊர்க்குருவி.