எனக்குத் தெரிந்த எழுத்தாளர் ஒருவர் இருந்தவர். அவர் ஏராளமான சிறுகதைகளை எழுதிக்குவித்தவர். அவரின் சிறுகதைகள் பெரும்பாலும் அவர் பார்த்த சம்பவங்கள், சமூகத்தில் நடக்கும் அநீதிகள் பற்றியே அதிகம் பேசுவதுண்டு. அவரின் எழுத்துகளில் எப்போதும், தான் எதிர்கொண்ட ஒரு சம்பவத்தை எழுதுவதென்றால், அந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களையே தனது கதைகளில் பயன்படுத்திவிடுவார். இதனால் அவர் எதிர்கொண்ட பிரச்சனைகள் ஏராளம். அதிகம் ஏன் பல உறவினர்களையே அவர் பகைக்க வேண்டிவந்தது. அவர் புலமைப்பரிசில் பெற்று கிராமத்திலிருந்து யாழ்ப்பாணம் நகரத்திலுள்ள பிரபல கல்லூரியில் கல்வி கற்ற காலத்திலிருந்து, உயர் தரம் வரை அவரோடு கூடவே படித்தவர்களில் அவருக்கு மிக நெருக்கமானவர் ஒருவர். அவர் ஒரு சிறுபான்மைத் தமிழர். அவரும் உயர்தரம் வரை படித்து விட்டு, அந்த எழுத்தாளரும் அவரின் நண்பரும் அரச உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்தனர். அவரின் நண்பரோ வேறு ஒரு நகரில் ‘செற்றில்’ ஆகிவிட்டார். இவர் யாழ்ப்பாணத்தில் பணியாற்றிக்கொண்டே எழுத்துத்துறையிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அவர் ஒரு கதையில் தனது அந்த உற்ற நண்பனுடன் நடந்த சம்பவம் ஒன்றை விபரித்தபோது, வழக்கம் போலவே அந்த நண்பரின் பெயரையும் பாவித்ததோடு, அவரின் சமூகம் பற்றியும் அந்தக் கதையில் பிரஸ்தாபித்திருந்தார். அந்தக் கதையால் அவரின் பால்ய நண்பனையே அவர் இழக்கவேண்டி வந்தது. காரணம் வேறு ஒன்றுமில்லை, அந்த நண்பர் இந்த எழுத்தாளர் தனது நண்பர் என்ற விடயத்தை தனது மனைவியிடமும் அடிக்கடி சொல்லி பெருமைப்படுவதுண்டு. அதனால் அவர் மனைவியும் அந்த எழுத்தாளரின் கதைகள் என்றால், அதனைத் தவறாது படித்து வந்திருக்கிறார். ஒரு கதையில் அவர் தனது கணவரைப் பற்றித்தான் எழுதியிருக்கிறார் என்பதை அவர் மனைவி அடையாளம் கண்டுகொண்ட பின்னர்தான், அவருக்கே தனது கணவர் எந்த சமூகத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதனால் அவர் குடும்பத்தில் களேபரம். அன்றிலிருந்து அந்த நண்பர்கள் இருவரும் எதிரிகளாகி விட்டனர். இந்தச் சம்பவம்தான் அந்த நண்பரின் கேள்வியை கேட்டதும் நினைவுக்கு வந்தது.
அந்த நண்பர் கேட்டார், ‘தமிழ் அரசு கட்சி ஒன்றுதானே, தமது வேட்பாளர்களில் இவர் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை பகிரங்கமாக அறிவித்து, அவர்களை கேவலப்படுத்துகின்றது. அது எதனால் என்று நினைக்கின்றீர்கள்?’ அவரின் கேள்வி நியாயமானதுதான். ஆனால், அதற்கு பதில் சொல்லக்கூடிய நிலையில் நான் இருக்கவில்லை. தமிழ் அரசு கட்சி ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் ஒரு சுலோகம் பயன்படுத்தப்பட்டு வந்ததை அவர்களின் எதிர்க்கட்சியான காங்கிரஸூம் அப்போது யாழ்ப்பாணத்தில் மிகவும் பலம் வாய்ந்த கட்டமைப்புகளோடு இருந்த இடதுசாரி கட்சிகளின் தலைவர்களும் கூறி விமர்சிப்பதை நண்பருக்கு ஞாபகப்படுத்தினேன். ‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பது தவறில்லை’, என்ற தமிழ் அரசு கட்சியின் அந்தக் கோஷம் இடதுசாரிகளால் விமர்சிக்கப்பட் டது. அதாவது ஆண்ட பரம்பரை என்று அவர்கள் சொல்ல வருவது, யாழப்பாண உயர் சமூகத்தைத் தான், அவர்கள் முன்னர் எப்படி தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்களை ‘ஆட்சி’ செய்தார்களோ (நடத்தினார்களோ) அதேபோல மீண்டும் ஆளவே விரும்புகின்றார்கள் என்று கூறுவதுண்டு.
இடதுசாரிகளின் இந்த விமர்சனத்தையே நண்பருக்கு ஞாபகப்படுத்த வேண்டியிருந்தது. தமிழ் அரசு கட்சியில் மட்டுமே இதுபோன்ற அறிவிப்புகள் விடுக்கப்படுவதுண்டு. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலோ அல்லது ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியிலோ போட்டியிடுகின்றவர்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்த வர்கள் என்பது அந்த வேட்பாளர் பட்டியலில் இருப்பவர்களுக்கே தெரிந்திருக்குமோ தெரியவில்லை. ஆனால், தமிழ் அரசில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்போதே, தாங்களும் ஒரு சிறுபான்மைத் தமிழரை வேட்பாளர் ஆக்கியிருக்கின்றோம் என்பதை பகிரங்கமாக அவர்கள் அறிவிக்கத் தவறுவதில்லை.
அதேபோலத்தான், பெண் வேட்பாளர்களையும் அவர்கள் தெரிவுசெய்வது வழக்கமாக இருந்து வருகின்றது. தங்கள் பட்டியலில் பெண் வேட்பாளர்களும் இருக்கிறார்கள் என்று சொல்லிக் கொள்வதற்காக சேர்க்கப்படுகின்றார்களே தவிர, அவர்களை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. இந்த நிலைமை தமிழ் அரசு கட்சியில் மாத்திரம் இருப்பதாகவும் கூறிவிட முடியாது. அநேகமாக எல்லாத் தமிழ் கட்சிகளிலுமே இந்த நிலைமை தொடரவே செய்கின்றது. எந்தக் கட்சியுமே, தமது தேர்தல் பிரசாரங்களின்போது, தமக்கு வாக்களிக்கின்ற பெண் வாக்காளர்கள் தமது வேட்பாளர் பட்டியலில் இருக்கும் பெண் வேட்பாளருக்கு தங்கள் விருப்பு வாக்குகளில் ஒன்றை வழங்க வேண்டும் என்று பகிரங்கமாகக் கோரிக்கை வைப்பதில்லை. அப்படி வைத்தால் சிலவேளைகளில் பெண்கள் தெரிவாவதற்கு சந்தர்ப்பம் ஏற்படலாம்.
– ஊர்க்குருவி.