26 C
Colombo
Thursday, November 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது

‘தமிழ் அரசு கட்சியின் மூளை என்று வர்ணிக்கப்பட்ட வி. என். நாகநாதன் கட்சியிலிருந்து வெளியேறி, சுயாட்சிக் கழகத்தை ஆரம்பித்து ஊர்காவற்றுறை தொகுதியில் போட்டியிட்டார்’ என்று தமிழ் அரசின் பேச்சாளர் என்று அறியப்பட்ட முன்னாள் எம். பி. சுமந்திரன் கூறியிருந்தமை பற்றி நேற்று இந்தப் பகுதியில் எழுதியிருந்தேன். அதனைப் படித்துவிட்டு, லண்டனிலிருந்து ஒரு நண்பர் குறுந்தகவல் அனுப்பியிருந்தார். ‘அவர்தான் அரசியலுக்கு புதியவர், அவர் தனது அரசியல் கட்சி பற்றி அதன் வரலாறுகளை பற்றி கூறும் போது கொஞ்சம் என்றாலும் அறிந்து வைத்துக்கொண்டு பேச வேண்டும் என்று எழுதியிருந்தீர்கள் அது சரியானதுதான். ஆனால், அந்த பேட்டியை எடுத்த ஊடக வியலாளருமா வரலாறு தெரியாத வராக இருந்திருக்கிறார்?’ என்று கேட்டிருந்தார். ‘அப்படி அந்த விடயத்தை தெரியாமல்தான் எழுதியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை. இவருக்கு ஒன்றும் தெரியாது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காகவும் அவர் அதனை அப்படியே, அவர் சொன்ன மாதிரியே போட்டிருக்கலாம் அல்லவா?’ என்று அவருக்கு பதில் அனுப்பினேன். இனி, தமிழ் அரசிலிருந்து இப்போது வெளியேறியவர்கள் எவரும் தமிழ் அரசின் மூளை என்று சொல்லக்கூடியவர்கள் அல்லர் என்றும் அந்தப் பேட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தமை பற்றி பின்னர் பார்ப்போம் என்று நேற்று எழுதியிருந்தேன்.

தமிழ் அரசின் மூளை என்று வர்ணிக்கப்பட்ட காவலூர் வி. நவரத்தினம், தமிழ் அரசு கட்சி டட்லி சேனநாயக்காவின் அரசாங்கத்தில் இணைவது என்று முடிவெடுத்தபோது அதனை நிராகரித்து கட்சியிலிருந்து வெளியேறினார். அவ்வாறு வெளியேறிய நவரத்தினம், பின்னர் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்தமை பற்றி மாத்திரமே சுமந்திரன் தெரிவித்திருந்தார். உண்மைதான், அவர் சுயாட்சிக் கழகத்தை ஆரம்பித்தபோது அதன் துணைச்செயலாளராக இளம் சட்டத்தரணியான என். சிறீகாந்தா நவரத்தினத்துக்கு துணையாக பணியாற்றியமையும் பழைய சங்கதிகள். ஆனால், அவர் ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபது தேர்தலில், தமிழ் மக்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவேண்டும் என்றால், அது தமிழீழம் அமைவதால்தான் அடையமுடியும் என்று அறிவித்துக்கொண்டே தேர்தலில் போட்டியிட்டார். தமிழீழம்தான் ஒரே தீர்வு என்று அவர் அறிவித்தபோது, அதனை சாதாரண தமிழ் அரசுக்காரர்கள் மாத்திரமல்ல, தந்தை செல்வாகூட நிராகரித்ததுடன், இது தமிழர்களை பெரிய ஆபத்தில் வீழ்த்தப் போகிறது என்று எச்சரிக்கவும் செய்தார்.

1970ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின்போது தீவுப்பகுதியில் புளியங்கூடல் என்னும் இடத்தில் தமிழ் அரசுக் கட்சி செயலாளர் அ. அமிர்தலிங்கத்துக்கும் தமிழர் சுயாட்சிக் கழகத் தலைவர் வி. நவரத்தினத்துக்கும் இடையே பொது மேடை விவாதம் ஒன்று நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது ‘தனிநாடு கோரும் நவரத்தினத்துக்கு மூளைக்கோளாறு ஏற்பட்டுவிட்டது’, என்றும் தனிநாட்டு கோரிக்கையை, ஒரு பைத்தியக்காரத்தனமான கோரிக்கையெனவும் அமிர்தலிங்கம் வர்ணித்து நவரத்தினத்தையும் அவரின் தனிநாட்டு கோரிக்கையையும் சாடினார். ஆனால், அதே அமிர்தலிங்கமும் தந்தை செல்வாவும்தான் எழுபத்தியேழில் தமிழீழம்தான் ஒரே தீர்வு என்று கூறிக்கொண்டு தமிழ் அரசுக்கட்சியையும் தமிழ் காங்கிரஸ் கட்சியையும் சேர்த்துக்கொண்டு தமிழர் விடுதலை கூட்டணியாக போட்டியிட்டனர். ஒரு சந்தர்ப்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்கூட, அவரின் அரசியல் குரு இந்த நவரத்தினம்தான் என்று கூறியிருக்கிறாரே தவிர, அவர் தந்தை செல்வாவுக்குக்கூட அத்தகைய பெருமையை வழங்கவில்லை. நவரத்தினம் தனது இறுதிக்காலத்தில் கனடாவில் பிள்ளைகளுடன் வாழ்ந்தபோது அவர் மரணிக்க, விடுதலைப் புலிகள் அவருக்கு நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி பெருமைப்படுத்தியிருந்தனர். கட்சியின் மூளை என்று வர்ணிக்கப்பட்ட நவரத்தினம், எது சரி என்று தான் கட்சியிலிருந்து வெளியேறியதும் கூறினாரோ அதனையே பின்னர் செல்வாவும் கட்சியும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.

‘இன்று தமிழ் அரசு கட்சியிலிருந்து வெளியேறியவர்களில் அவ்வாறு மூளை என்று கூறக்கூடியவர்கள் யாருமில்லை’ என்றும் அந்தப் பேட்டியில் சுமந்திரன் கூறியிருந்தார். தமிழ் அரசிலிருந்து அவர் கூறியதுபோல, நவரத்தினம் (அவர் நாகநாதன் என்று கூறியிருந்தாலும்) வெளியேறியபோதும் அவரையும் அவரின் கொள்கையையும் பைத்தியக்காரத்தனமானது என்றும் அவருக்கு மூளைக் கோளாறு என்றும் தான் கூறினார்கள். ஆனால் பின்னர், அவரை எதற்காக பைத்தியக்காரத்தனம் என்று சொன்னார்களோ அதனையே தாங்களும் செய்து தங்களின் மூளையையும் கேள்விக்கு உட்படுத்தியதுதான் இப்போது ஞாபகத்துக்கு வருகின்றது. இப்போது வெளியேறியவர்கள் மூளையை கேள்விக்கு உட்படுத் தியிருக்கிறார் சுமந்திரன். மூளை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்ற ஓர் உடல் உறுப்புத் தான். அதுவே இந்த உடலை முழுமையாக இயக்குகின்றது. ஓர் உடலுக்கு ஒரு மூளைதான் இருக்க முடியும். இரண்டு இருந்து விட்டால் என்ன நடக்கும் என்று நினைத்துப் பார்க்கமுடியவில்லை. அதுபோலத்தான், தமிழ் அரசுக்கும் ஒரு மூளைதான் இருக்கமுடியும். அது சரியாக உடலை இயக்குகின்றதா இல்லையா என்பதை அந்த கட்சியின் நடவடிக்கைகளும் அதன் செயல்பாடுகளுமே நிரூபிக்கும். தமிழ் அரசு கட்சி இப்போது எத்தகைய நிலையில் இருக்கின்றது என்பதும் தமிழ் மக்களுக்கு தெரியாததல்ல. அதற்குக் காரணம் என்ன என்பதும் தெரியாததல்ல.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles