இப்படியும் நடக்கிறது…!

0
205

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பற்றி ஒரு தடவை விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் சொன்னது பற்றி முன்னரும் இந்தப் பத்தியில் குறிப்பிட்டிருந்தேன்.
ரணில் இப்போது சாம- தான- தண்டத்தை பயன்படுத்தி தன்னை நிலை நிறுத்துவதில் வெற்றியடைந்து கொண்டிருக்கின்றார் என்றே தெரிகின்றது.
ஜனாதிபதியாக அடுத்த இரண்டரை வருடங்களை நிச்சயப்படுத்திக் கொண்டதும், அவரின் கவனம் இப்போது அடுத்த தேர்தலை இலக்கு வைத்து நகர்ந்து கொண்டிருக்கின்றது.
சர்வகட்சி அரசு ஒன்றுக்கான அழைப்பை அவர் விடுத்த போதே, இது சாத்தியமாகப் போவதில்லை என்பது அவருக்குத் தெரியாததல்ல.
ஆனால், அதனை எதிர்க்கவும் முடியாத இக்கட்டான நிலையில் கட்சிகள் நெளிந்த போதும் – அதனை ஏற்றுக்கொண்டாலும் அதில் இடம்பெற அவை விரும்பவில்லை.
இதுவும் அவர் முன்கூட்டியே கணக்குப்போட்டுப் பார்த்து கணித்ததுதான்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சர்வகட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு.
ஆனால், அதில் இடம்பெறுவதில்லை என்று முடிவெடுக்கும் என்பதும் முன்னரே தெரிந்ததுதான்.
அது, இப்படியொரு முடிவெடுத்தால் அதிலிருந்து பலர் வெளியே வருவார்கள் என்பதும் ரணில் அறியாதது அல்ல.
தன்னை தனிமனிதனாக மாற்றிய அந்தக் கட்சியிலிருந்து பலரும் இப்போது அரசில் (ரணிலுடன்) இணைய ஆயத்தமாவதால், அந்தக் கட்சியும் இப்போது சஜித் என்ற தனிமனிதருக்கான கட்சியாக மாறிக் கொண்டிருக்கின்றது.
இதேபோல, மலையகத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் இ. தொ. காவும் தமிழ் முற்போக்கு கூட்டணியும் சர்வகட்சி என்ற பெயரில் ஒரே முகாமில் சங்கமமானால் அவர்களின் உள்ளூர் அரசியலும் இடறுப்பட வேண்டி வரும்.
இதனால், அவர்களும் சர்வகட்சி அரசாங்கத்தில் இடம்பெறுவதா இல்லையா என்பதில் உள்ளுக்குள் மோதிக் கொண்டிருக்கின்றனர்.
புதிய அமைச்சரவையில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக ஜீவன் தொண்டமான் பதவியேற்பது உறுதியாகிவிட்ட நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளும் சஜித்தின் எதிரணியில் அமர்ந்திருப்பது தமது அரசியலுக்கு ஆபத்தாகிவிடும் என்பது திகாம்பரத்தின் கணக்கு.
இதனால், அவரும் அமைச்சராவது பற்றி யோசிக்கத் தொடங்கிவிட்டார் என்று தெரிகின்றது.
இதனால் தான் அந்தக் கூட்டணியில் உள்ள மலையக மக்கள் முன்னணி, அமைச்சரவையில் இடம்பெறுவதில்லை என்று முடிவெடுத்ததுடன், திகாம்பரமோ, மனோ கணேசனோ அமைச்சரானால் அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறப் போவதாக சிவப்பு எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.
இந்த நெருக்கடியிலிருந்து வெளியே வர மனோ கணேசன் புதிய கோரிக்கை ஒன்றை ரணிலிடம் முன்வைத்திருக்கிறாரெனத் தெரிகின்றது.
ரணில் அமைக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கும் புலம் பெயர்ந்தோர் விவகார அலுவலகத்தின் நிர்வாகப் பொறுப்பை தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரியிருக்கிறாராம் மனோ கணேசன்.
ஓர் அமைச்சருக்குரிய அதிகாரங்களுடன் இந்த அலுவலகத்தை நிர்வகிப்பது நாட்டுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது மனோவின் கருத்து.
அதற்கு அவர் பொருத்தமான வரும்கூட.
இப்படியே, சர்வகட்சி அரசு என்ற போர்வையில் ஒவ்வொரு கட்சிகளையும் சிதைக்கத் தொடங்கியிருக்கிறார் ரணில் என்கின்றனர் அவரைத் தெரிந்தவர்கள்.
அதனால் தான் முன்னர் அமைச்சரவையில் சேர்வதில்லை என்ற முடிவுடன் இருந்த சுதந்திரக் கட்சி இப்போது அரசாங்கத்தில் சேர்வதற்கு முடிவெடுத்துள்ளது.
அவ்வாறு செய்யவில்லை என்றால் தமது கட்சியிலிருந்து பலர் வெளியேறிவிடுவர் என்ற பயம் தான் இதற்கு காரணம் என்கின்றனர் விசயமறிந்தவர்கள்.
சர்வகட்சி அரசு இப்போது சாத்தியமில்லை என்பதால், அரசுடன் இணைகின்றவர்கள் எல்லோரையும் இணைத்துக் கொண்டு தேசிய அரசாங்கமாக நடையைக் கட்ட தயாராகி வருகிறார் ஜனாதிபதி.
இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கரு ஜெயசூரிய தலைமையில் சுமார் பதினெட்டுப் பேர் மகிந்தவுடன் இணைந்து ஆட்சியமைத்தது போல, ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து இருபது பேருடனும் மற்றைய சிறிய சிறிய கட்சிகளுடனும் இணைந்து இப்போது தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கத் தயாராகி வருகிறார் ஜனாதிபதி.
இந்த வார இறுதிக்குள் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டு விடும் என்கின்றன ஜனாதிபதியுடன் நெருக்கமான வட்டாரங்கள்.

  • ஊர்க்குருவி.