இப்படியும் நடக்கிறது!

0
164

புலம்பெயர்ந்தோர் அலுவலகம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அண்மையில் அறிவித்திருந்தமை பலருக்கும் நினைவிருக்கலாம்.
ரணில் பதவியேற்ற காலத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியை பெறுவதில் தொடர்ந்து அக்கறை காட்டிவருகின்றார்.
முன்னர் அவர் நல்லாட்சி அரசின் காலத்தில் பிரதமராக இருந்தபோதும் அவர் இது விடயத்தில் அக்கறை காட்டியது தெரிந்ததே.
அப்போது நிதி அமைச்சராக இருந்த மங்கள சமரவீர ஊடாக புலம்பெயர்ந்த சில அமைப்புக்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, அவர்களுடாக சில நகர்வுகளுக்கு முயன்றதும் அப்போது பேசப்பட்டது.
ஆனால், அவர் காலத்தில் அதாவது மங்கள சமரவீரவின் ஊடாக அவர் நடத்திய தொடர்பாடல்கள் நாட்டுக்கு பயனுள்ளதாக இருந்ததா? அதனால் ஏதாவது பயனை இந்த நாடு பெற்றதா என்பது அவர்களுக்கு மாத்திரமே தெரிந்த சங்கதி.
புலம்பெயர்ந்த தமிழர்கள் என்றால் சிலருடைய பெயர்கள் மாத்திரமே பலருக்கும் ஞாபகத்தில் வரும். அவர்கள் அங்குள்ள தமிழர்களால் மதிக்கப்படுகின்றவர்களா? அவர்களின் பேச்சுக்கு புலம்பெயர் தமிழர்கள் கட்டுப்படுவார்களா என்பதைப் பற்றிய எந்தவித தெளிவும் இல்லாமலே அப்போது சில அமைப்புக்களுடன் நல்லாட்சி அரசு தொடர்பாடலை முன்னெடுத்தது.
அதற்கு இங்குள்ள சில தமிழ் அரசியல்வாதிகளும் காரணம்.
அந்த அரசியல்வாதிகளை ஏற்றுக்கொள்கின்ற அமைப்புக்களை மாத்திரமே அவர்கள் அரசுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.
ஆனால், அந்தக் காலத்திலேயே அவர்கள் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடனேயே நடமாடவேண்டி வந்தது ஏன் என்பதும் இரகசியமானதல்ல.
புலம்பெயர் தமிழர்கள் சிலரால் அவர்களுக்கு ஆபத்து இருப்பதாக கூறியே பாதுகாப்பு வழங்க வேண்டியிருந்தது.
இதன்மூலம் புலம்பெயர் தமிழர்களின் ஒருசாரார் ஏற்றுக்கொள்ளாதவர்களே இன்னுமொரு புலம்பெயர் அமைப்பை அரசுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.
இவையெல்லாம் பழைய சங்கதிகள்.
ஆனால் நாம் இப்போது சொல்ல வருவது, அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, புலம்பெயர்ந்தோர் நலனையும் அவர்களுடனான தொடர்பாடலையும் கவனிக்க கொழும்பில் தனியான அலுவலகம் ஒன்றை அமைக்கவிருப்பதாக தெரிவித்திருந்ததும், கொழும்பில் சிலர் தங்களையே புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகளாகவும், தாங்களே அவர்களின் பிரதிநிதிகள் என்றும் பகிரங்கமாகக் கூறத் தொடங்கிவிட்டதைக் காணமுடிகின்றது.
அண்மையில் ஒரு சிங்கள சமூகவலைத்தள ஊடகம் ஒன்றில் ஒருவர் தன்னைத் தானே புலம்பெயர் தமிழர்களின் தலைவராக சித்தரித்து ஒரு பேட்டியை வழங்கியிருந்தார்.
அவர் யார் என்று எந்தவொரு புலம்பெயர் தமிழராவது அறிந்திருப்பாரா என்பது தெரியவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலையில் புதிதாக அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிப்பதாக அறிவித்துவிட்டு சில ஊடக சந்திப்புக்களை நடத்திய ஒருவர், பின்னர் சில காலங்களின் பின்னர், கோட்டாபய அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக தொடங்கிய ‘வியத்மக’ என்ற அமைப்பில் தானே முக்கியஸ்தர் என்று சொல்லிக் கொண்டு திரிந்ததை காணமுடிந்தது.
அவர் இப்போது தானே புலம்பெயர் தமிழ்களின் பிரதிநிதி என்றும் தான் நினைத்தால் இலங்கைக்கு பில்லியன் கணக்கில் டொலர்களைக் கொண்டுவரமுடியும் என்றும் கூறித்திரியத் தொடங்கியிருக்கிறார்.
அந்த குறித்த சிங்கள சமூகவலைத்தள ஊடகம், எப்போதும் சர்ச்சைக்குரிய விடயங்களை அலசுவதில் பெயர் பெற்றது.
அதில் கலந்துகொண்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசினால், அது சிங்கள மக்கள் மத்தியில் பிரபல்யமாகிவிடும்.
அந்தப் பிரபல்யத்தை வைத்துக்கொண்டு, சம்பந்தப்பட்டவர்களுடன் ஊடாடுவதை நோக்கமாகக் கொண்டே பலரும் இதுபோன்ற புரளிகளைக் கிளப்பிக்கொண்டிருக்கின்றனர்.
முன்னதாக இப்படித்தான் ஒருவர் அந்த ஊடகத்தில் தோன்றி புலிகளை மிகக்கடுமையாக விமர்சித்து பேட்டியளித்தார்.
அவரது வாதங்கள் நியாயமானவை போல தோன்றினாலும் அவரது நோக்கம் என்ன என்பதை எவரும் அறிந்திருக்கவில்லை.
சில நாட்களில் அவர் எல்லா அரசில்வாதிகளினதும் அறிமுகத்தை பெறமுடிந்தது.
அதுபோலவே இப்போது சிலர் தாங்களே புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள் என்றும் தாங்கள் நினைத்தால் பில்லியன் கணக்கில் டொலர்களைக் கொண்டு வரமுடியும் என்றும் கதையளக்கத் தொடங்கிருக்கின்றனர்.
அதற்காகவே அந்த ஊடகத்திற்கு பணம் கொடுத்தும் பேட்டியளிக்க காத்திருக்கின்றனராம்.
அதில் பேசுவதற்கு சிங்களம் தெரிவது மாத்திரமே அவர்களுக்கு இருக்கும் ஒரே தகுதி.!

  • ஊர்க்குருவி