இப்படியும் நடக்கிறது…!

0
181

துருக்கியில் வாழ்ந்த முல்லா என்ற கவிஞர் ஒருவரின் கதைகள் உலகப்புகழ் வாய்ந்தவை.
அவரின் கதை ஒன்று தான் இப்போது ஞாபகத்துக்கு வருகின்றது.
அறிஞர்கள் கூடியிருந்த ஒரு சபையில் மிகவும் பயனுடையது எது சூரியனா அல்லது சந்திரனா? என்பது குறித்து பட்டிமன்றம் ஒன்று நடந்து கொண்டிருந்தது.
அங்கே பேசியவர்கள் பெரும்பான்மையினர் சந்திரனைவிட சூரியனால் தான் உலகத்துக்கு அதிக பயன் உண்டு என்ற கருத்தையே வலியுறுத்திப் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது பேசியவர்களை நையாண்டி செய்து வேடிக்கை பார்க்க வேண்டும் என்று முல்லாவுக்குத் தோன்றியது.
அவர் உடனே எழுந்து ‘அறிஞர் பெருமக்களே, இங்கே நடந்த பட்டிமன்றம் தொடர்பாக எனது கருத்தைக் கூறலாமா?’
என்று கேட்டார்.
‘இது பொதுமன்றம், இங்கு யாரும் தங்கள் கருத்தை எந்த விதத் தடையுமின்றிக் கூறலாம்.
முல்லா அவர்களே உங்கள் கருத்தைக் கூறுங்கள்’ என்று அறிஞர் பெருமக்கள் கேட்டுக் கொண்டனர்.
‘சூரியனை விடச் சந்திரனால் தான் உலத்துக்கு அதிகமான பயன் கிடைக்கிறது என்று நான் கருதுகிறேன்’ என்றார் முல்லா.
அது எவ்வாறு விளக்குங்கள் என்று அறிஞர்கள் கேட்டனர்.
பகலில் நமக்கு இயற்கையாக வெளிச்சம் இருக்கிறது.
அதனால் சூரியனுடைய உதவி நமக்குத் தேவையே இல்லை.
இரவில் இருளாக இருக்கிறது.
சந்திரன் இருளை அகற்றி நமக்குத் தேவையான ஒளியை இரவிலே அளிக்கிறது.
அதனால் சந்திரன் தான் நமக்கு அதிக பயனை அளிக்கின்றது என்றார் முல்லா.
முல்லா தங்களை நையாண்டி செய்கிறார் என்பதை உணர்ந்து அறிஞர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள்.
அந்தச் செய்தியைப் படித்த போது இந்தக் கதை தான் ஞாபகத்திற்கு வந்தது.
‘மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசுகள் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் காலத்தைக் கடத்துகின்றன.இதை இனியும் அனுமதிக்க முடியாது.’இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இதுவே அந்தச் செய்தி.
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா, தனது அறிக்கையில் மேலும் என்ன தெரிவித்திருக்கின்றார் என்பதையும் படித்துவிட்டு பார்ப்போம்.
‘வடக்கு – கிழக்கு தமிழ் பேசும் மக்களின் சரித்திர ரீதியான தாயகம்.
வடக்கு – கிழக்கு மாகாணங்கள் அவர்களின் வதிவிடப்பிரதேசம்.
எனவே, தமிழ் பேசும் பிரதேசம் ஒன்றிணைந்த வடக்கு – கிழக்கில் அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம்.’
இதுவே அவரின் கருத்தின் சாராம்சம்.
அதாவது வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் மக்களின் சரித்திர ரீதியான தாயகம்.
அதாவது தமிழ் – முஸ்லிம் மக்களின் தாயகம் என்கிறார்.
ஒன்றிணைந்த வடக்கு, கிழக்கில் அதிகாரப் பகிர்வு கேட்கிறார்.
அதற்கு அவர் செய்யவேண்டியது முதலில் அவர் சொல்லும் தமிழ் பேசும் மக்களின் ஒருமித்த கருத்தையல்லவா பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்று அரச தரப்பிலிருந்து கேட்டால் அவரிடம் அதற்கு பதில் இருக்குமா தெரியவில்லை.
இப்போது அதுவல்ல நாம் சொல்ல வருவது, சம்பந்தன் ஐயா இது போன்ற அறிக்கைகளை விடுப்பது பல வருடங்களாகவே தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.
‘தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை வழங்காவிட்டால் சர்வதேசம் இனியும் பார்த்துக் கொண்டிருக்காது.’
‘தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் சர்வதேசம் சும்மா விடாது.’
‘தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் மாறிமாறி ஆட்சிக்கு வரும் அரசுகள் காலம் கடத்துவதை இனியும்
அனுமதிக்க முடியாது.’
இப்படி பல கருத்துக்களை சம்பந்தன் ஐயா நீண்ட காலமாகவே வெளியிட்டு வருகின்றார்.
எங்களுடைய கவலை எல்லாம், இனியும் என்ற தமிழ் சொல்லுக்கான வரைவிலக்கணத்தை தமிழில் மாற்றிவிட்டார்களா என்பது தான்.
நமக்குத் தெரிய, இனியும் என்றால் இதற்குப்பின்னரும் என்று தான் பொருள்.
அதாவது இதற்குப் பின்னரும் (அதாவது இந்த அறிக்கையை வெளியிட்ட பின்னரும்) காலத்தைக் கடத்தினால் நாங்கள் பொறுக்கப்போவதில்லை – அனுமதிக்கப்போவதில்லை என்பது தான்.
சரி ஐயா, அனுமதிக்க வேண்டாம்.
அடுத்து என்ன என்பதையும் அல்லவா சொல்ல வேண்டும்.
அது என்ன இனியும் அனுமதிக்க மாட்டோம்.
இனியும் அனுமதிக்க முடியாது என்று கூட்டமைப்பின் தலைவராக தெரிவான காலத்திலிருந்து சொல்லிக்கொண்டே இருக்கின்றீர்கள்.
அல்லது இனியும் என்ற தமிழ் வார்த்தைக்கு வேறேதும் பொருள் உண்டா என்பதையாவது சொல்லிவிட்டு அறிக்கை விடுங்கள்.
அல்லது மேலே உள்ள முல்லாவின் கதைபோல, எங்களைப் பார்த்து நையாண்டி செய்கிறீர்களா என்பதையாவது சொல்லிவிடுங்கள்.!

ஊர்க்குருவி.