இரும்புக் கம்பியால் தாக்கி கணவன் பலி : மனைவி காயம் – பிங்கிரிய பகுதியில் சம்பவம்

0
98

குருநாகல், பிங்கிரிய பகுதியில் இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதில் கணவன் உயிரிழந்துள்ளதுடன் அவரின் மனைவி காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகொல்லாகம பிரதேசத்தில் நபர் ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

நாகொல்லாகம பிரதேசத்தைச் சேர்ந்த தாக்குதலை மேற்கொண்ட நபர் உயிரிழந்த நபரின் கடைக்கு அருகில் மற்றுமொரு நபருடன் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த போது அதனை தடுக்கும் வகையில் உயிரிழந்தவர் செயற்ப்பட்டுள்ளதோடு  இவர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு வலுப்பெற சந்தேக நபர் தனது வீட்டுக்கு சென்று அங்கிருந்த இரும்புக் கம்பியை எடுத்து வந்து குறித்த நபரை தாக்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  

இதன்போது சந்தேக நபர் உயிரிழந்தவரின் மனைவியையும் கடுமையாக தாக்கியுள்ளதுடன் காயமடைந்த அவர் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்தவர் 52 வயதுடைய வல்லவ, நாகொல்லாகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

சம்பவத்துடன் தொடர்புடைய 41 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.