குருணாகல், நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் நேற்று (19) இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருணாகல், வெலகெதர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோனதெனிய பிரதேசத்திலுள்ள வீடொன்றில் பெண்ணொருவர் கழுத்த வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கோனதெனிய பிரதேசத்தை சேர்ந்த 46 வயது பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணை படுகொலை செய்த நபர், அருகிலுள்ள பாழடைந்த வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இருவரது சடலங்களும் மீட்கப்பட்டு குருணாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில், வெலகெதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ககேவத்த பிரதேசத்தில், கணவன், மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முறுகலில் மனைவி படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
பிரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற பெயரில் 23 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில், மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.