இலங்கைக்கு போட்டியான நாடுகளுக்கான வரி திருத்தங்கள் தொடர்பிலும் நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் – பொருளாதார நிபுணர் தனநாத் பெர்னாண்டோ!

0
9

இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரி தொடர்பில் மாத்திரம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்காமல், எம்முடன் போட்டியிடும் நாடுகளுக்கான வரிகள் கூடிக் குறையும் போதும் நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். காரணம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப மீண்டும் மீண்டும் வரி திருத்தங்களை மேற்கொள்ளக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அது எமது ஏற்றுமதித்துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பிராந்திய நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரியுடன் ஒப்பிடுகையில், இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள வரி சிறந்த மட்டத்திலேயே காணப்படுகிறது. 44 சதவீத தீர்வை வரியானது 3 மாத நிவாரண காலத்தின் பின்னர் 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவைத் தவிர ஏனைய பல நாடுகளுக்கும் இதற்கு சமமான வரி விதிப்பே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பினால் மூன்று வழிகளில் எமக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் காணப்பட்டது. அவற்றில் இரண்டு பாதிப்புக்கள் இப்போதும் காணப்பட்டாலும், ஒரு பாதிப்பிலிருந்து நாம் விடுபட்டுள்ளோம்.

தீர்வை வரி அதிகரிப்பின் பின்னர் எமது ஏற்றுமதிகளுக்கு அமெரிக்காவில் கேள்வி குறைவடையக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது நடைமுறையிலிருக்கும் தீர்வை வரிக்கு மேலதிகமாகவே இந்த 20 வீத புதிய வரி அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அமெரிக்காவில் இலங்கையின் ஏற்றுமதி பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் பட்சத்தின் அதன் கொள்வனவு குறைவடையும். அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் அது எமது ஏற்றுமதியில் நிச்சயம் தாக்கம் செலுத்தும். இந்த அபாயம் இப்போதும் காணப்படுகின்ற போதிலும், அது முன்னரை விட சற்று குறைவாகும்.

அடுத்தது எமக்கு போட்டியான நாடுகளுக்கு எம்மை விட குறைந்த வரி விதிக்கப்படும் பட்சத்தில், எமது உற்பத்திகளுக்கான முற்பதிவுகள் அந்த நாடு;களுக்கு செல்லக் கூடிய அபாயமாகும். உதாரணமாக முதல் சந்தர்ப்பத்தில் வியட்நாமுக்கு 20 சதவீதம் வரி விதிக்கப்பட்ட போது, எமக்கு 30 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்தது. ஆடை தொழிற்துறையில் எமக்கான வாய்ப்புக்கள் வியட்நாமுக்குச் செல்லக் கூடிய சந்தர்ப்பம் காணப்பட்டது. எனினும் தற்போது வியட்நாமுக்கு சமமாக எமக்கும் 20 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளமையானது ஆடை தொழிற்துறையில் எமக்கான சவாலை சற்றுக் குறைத்துள்ளது.

அதேபோன்று பங்களாதேஷ், தாய்லாந்து, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளும் எமது மட்டத்திலேயே காணப்படுகின்றன. எனவே பிராந்தியத்தில் போட்டியிடக் கூடிய அதிக வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது. மூன்றாவது அச்சுறுத்தல் எமது சேவை மற்றும் ஏனைய சேவைகளில் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் ஆகும். அது பெரும்பாலும் சுற்றுலாத்துறை சார்ந்ததாகக் காணப்படும். ஏனைய நாடுகளுக்கு அதிக வரி விதிக்கப்படும் பட்சத்தில் அந்த நாட்டு பிரஜைகளின் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் சுற்றுலாப்பயணிகளின் வருகையில் நிச்சயம் தாக்கம் செலுத்தும்.

எனவே எமக்கான வரி தொடர்பில் மாத்திரம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்காமல், எம்முடன் போட்டியிடும் நாடுகளுக்கான வரிகள் கூடிக் குறையும் போதும் நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப மீண்டும் மீண்டும் வரி திருத்தங்களை மேற்கொள்ளக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அது எமது ஏற்றுமதித்துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது இந்தியாவுக்கு மேலதிகமாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இது உலக மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தில் நேர்மறையானதும், எதிர்மறையானதுமான தாக்கங்களை ஏற்படுத்தும்.

இலங்கையின் ஆடைத் தொழிற்துறையின் பிரபல தொழிலதிபர்களின் ஆடை தொழிற்சாலைகள் இந்தியாவில் காணப்படுகின்றன. அவர்கள் ஊடாக ஏற்றுமதி செய்யும் போது இந்த வரி விதிப்பு தாக்கம் செலுத்தும்.

இலங்கையின் ஆடைத் தொழிற்துறைக்கான துணி உள்ளிட்ட மூலப் பொருட்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.

இவ்வாறான மூலப்பொருட்கள் தொடர்பில் அராசங்கத்தால் எடுக்கப்படும் தீர்மானம் என்ன என்பது இப்போது எமக்குத் தெரியாது. மறுபுறம் இந்தியாவுக்கான வரி அதிகரிப்பானது எமக்கு சில ஏற்றுமதி வாய்ப்புக்களை வழங்கக் கூடிய சந்தர்ப்பமும் காணப்படுகிறது என்றார்.