இந்தியா ஜப்பான் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பில் இருதரப்பு கடன்வழங்குநர்களிடையே பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான பொதுவான தளமொன்றை அறிவித்துள்ளன.
இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் நடுத்தர வருமான நாடுகளின் கடன்நெருக்கடியை தீர்ப்பதற்கான ஒரு முன்மாதிரியாக அமையும் என அவை நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
இலங்கையின் கடன்வழங்குநர்கள் மத்தியில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக இந்த வருடம் ஜி ஏழு நாடுகளிற்கு தலைமை வகிக்கும் ஜப்பான் மேற்கொண்டுள்ள இந்த முயற்சியில் இலங்கைக்கு அதிக கடன்களை வழங்கிய சீனா இணைந்துகொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இவ்வாறான பரந்துபட்ட கடன்வழங்குநர்கள் குழு மத்தியில் இந்த பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவைக்க முடிந்துள்ளமை ஒரு வரலாற்று நிகழ்வு என ஜப்பானின் நிதியமைச்சர் சுனிச்சி சுசிக்கி தெரிவித்துள்ளார்.இந்த குழு அனைத்து கடன்வழங்குநர்களிற்குமானது அனைவரும் இணையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த குழு விரைவில் முதலாவது சுற்று பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும் என பிரான்சின் திறைசேரிக்கான பணிப்பாளர் நாயகம் இமானுவேல் மௌலின் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகளிற்கான ஒரு தனித்தளத்தை ஏற்படுத்துவது வரவேற்க தக்க முயற்சி என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் சில நாட்களிற்கு முன்னர் தெரிவித்திருந்தார்