இலங்கை அணியில் 3 சுழல்பந்துவீச்சாளர்கள் இடம்பெறலாம் ; பங்களாதேஷுடனான 2ஆவது போட்டி இன்று!

0
9

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (05) பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் குறிக்கோளுடன் இலங்கை களம் இறங்கவுள்ளது.

இன்றைய போட்டிக்கான ஆடுகளம் சுழல்பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பின் இலங்கை அணியில் 3ஆவது சுழல்பந்துவீச்சாளராக துனித் வெல்லாலகே சேர்க்கப்படாலம் என ஊடகவியலாளர்களிடம் தலைமைப் பயிற்றுநர் சனத் ஜயசூரிய தெரிவித்தார்.

பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும் என்று கருதியதால் இலங்கை அணியில் 2 வேகப்பந்துவீச்சாளர்களும் ஒரு வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரரும் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

ஆனால், அப் போட்டியில் சுழல்பந்துவீச்சாளர்கள் 8 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

வனிந்து ஹசரங்க 4 விக்கெட்களைக் கைப்பற்றியதுடன் தனது 100ஆவது விக்கெட்டைப் பூர்த்திசெய்தார். கமிந்து மெண்டிஸ் இரண்டு கைகளாலும் மாறிமாறி பந்துவீசி 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அவர்களது துல்லியமனா பந்துவீச்சுகளுடன் சரித் அசலன்க குவித்த அபார சதம், களத்தடுப்பில் மிலான் ரத்நாயக்க, ஜனித் லியனகே ஆகியோரின் அற்புத செயல்பாடுகள் ஆகியனவும் இலங்கையின் வெற்றியில் பெரும் பங்காற்றி இருந்தன.

இதேவேளை கெத்தாராம ஆடுகளத்தில் துனித் வெல்லாலகே சிறப்பாக பந்துவீசி 25 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளதுடன் பலம்வாய்ந்த இந்தியாவுக்கு எதிராக இரண்டு தடவைகள் 5 விக்கெட் குவியல்களை பதிவுசெய்துள்ளார். அது மட்டுமல்லாமல் துடுப்பாட்டத்திலும் அவர் திறமையை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

எனவே, வேகப்பந்துவீச்சாளர் ஏஷான் மாலிங்க நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக துனித் வெல்லாகே அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை அசித்த  பெர்னாண்டோவுடன் சகலதுறை வீரர்களான மிலான் ரத்நாயக்க, ஜனித் லியனகே ஆகியோர் வேபந்துவீச்சில் ஈடுபடுத்தப்பட வாய்ப்புள்ளது.

இதற்கு அமைய இன்றைய போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்க, நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சரித் அசலன்க (தலைவர்), ஜனித் லியனகே, துனித் வெல்லாலகே, மிலான் ரத்நாயக்க, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, அசித்த பெர்னாண்டோ ஆகியோர் இலங்கை அணியில் இடம்பெறுவர்.

ஒருவேளை மேலும் ஒரு வேகபந்து வீச்சாளரை இணைப்பதாக இருந்தால் பெரும்பாலும நிஷான் மதுஷன்க இன்றைய போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளது. அப்படியானல் துனித் வெல்லாலகே 12ஆவது வீரராக இடம்பெறுவார்.

இதேவேளை, இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமப்படுத்தும் கங்கணத்துடன் அணியில் சில மாற்றங்களுடன் பங்களாதேஷ் களம் இறங்கவுள்ளது.

முன்னாள் அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இடது கை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மொஹமத் நய்ம் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

அத்துடன் தஸ்கின் அஹமத், முஸ்தாபிஸுர் ரஹ்மான், வேகப்பந்துவீச்சாளர் மொஹமத் சய்புதின் ஆகியோர் இன்றைய போட்டியில் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை ஷொரிபுல் இஸ்லாம், நசும் அஹ்மத் ஆகியோரும் இரண்டாவது போட்டிக்கான பங்களாதேஷ் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அவர்களைவிட அணித் தலைவர் மெஹிதி ஹசன் மிராஸ், லிட்டன் தாஸ், தன்ஸித் ஹசன், பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன், தௌஹித் ஹிரிதோய், ஜேக்கர அலி, ஷமிம் ஹொசெய்ன், ரிஷாத் ஹொசெய்ன், மேஹெதி ஹசன், ஷொரிபுல் இஸ்லாம், தன்ஸிம் ஹசன் சக்கிப் ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.