இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தியா- இலங்கை இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி எதிர்வரும் 3ஆம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் இலங்கை பிரிமீயர் லீக்கில் அசத்திய அவிஷ்கா பெர்னாண்டோ, சமரவிக்ரமா, சமிகா கருணாரத்னே ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதேவேளை சன்டிமால், அசிதா பெர்னாண்டோ, லக்ஷன் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அணியின் தலைவராக தசுன் ஷனக தொடர்ந்தும் இடம்பெறுகிறார். 20 ஓவர் அணியின் துணை தலைவராக ஹசரங்கவும், ஒரு நாள் அணியின் துணைத் தலைவராக குசல் மென்டிசும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஷனகா, பதும் நிசாங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, சமரவிக்ரமா, குசல் மென்டிஸ், அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா, ஹசரங்கா, அஷன் பண்டாரா, தீக்ஷனா, சமிகா கருணாரத்னே, கசுன் ரஜிதா, மதுஷங்க, துனித் வெல்லாலகே, பிரமோத் மதுஷன், லாஹிரு குமார் மற்றும் பானுக ராஜபக்ச, நுவான் துஷாரா, ஜெப்ரி வான்டர்சே, நுவானிது பெர்னாண்டோ ஆகியோர் இந்த அணிகளில் இடம்பெறும் இலங்கை வீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியை ஹர்திக் பாண்டியாவும், ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியை ரோகித் சர்மாவும் வழிநடத்தவுள்ளனர்.