சீனோபார்ம் கொரோனா தடுப்பூசி விடயத்தில் தீர்மானம் எடுக்க வேண்டியது இலங்கையே. உள்ளக விவகாரத்தில் எம்மால் தலையீடு செய்யமுடியாது என்று இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு ஆறு இலட்சம் சீனோபார்ம் கொரோனா தடுப்பூசிகளை சீனா வழங்கியிருந்தது.
இதற்கு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்திலும், வெளியிடங்களிலும் வெளிப்படுத்திய எதிர்ப்பு காரணமாக, இலங்கை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தும் வரையில் சீனோபார்ம் யாருக்கும் வழங்கப்படாது என்றும் இலங்கையிலுள்ள சீனப் பிரஜைகளுக்கு மட்டும் வழங்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தார்.
சீனோபார்ம் தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்காக உலக சுகாதார அமைப்பு ஒப்புதலளிக்கும் வரை இலங்கையர்களுக்கு அது பயன்படுத்தப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நாட்டுக்கு ஏற்கனவே கொண்டுவரப்பட்ட சீனோபார்ம் தடுப்பூசியானது தடுப்பூசியின் பாதுகாப்பு செயல்திறன், தரம் தொடர்பில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை ஊடாக முறையான அனுமதியளிக்கப்படும் வரை அத்தடுப்பூசியைப் பயன்படுத்துவதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா ஊடாக இந்த மனு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசியை பொதுமக்களுக்கு பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை குறித்த தடுப்பூசி தொடர்பில் ஆராய நியமித்த நிபுணர் குழுவின் விவரங்களையும் தடுப்பூசி தொடர்பில் கோரிய விடயங்களையும் வெளிப்படுத்த பிரதிவாதிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.
எனினும் கொழும்பிலுள்ள அனைத்து சீனப் பிரஜைகளுக்கும் சீனோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனத் தூதரகத்தின் ஊடகப் பேச்சாளரும், அரசியல் பிரிவுத் தலைவருமான லு சொங் தெரிவிக்கையில்:
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரிலேயே சீன அரசாங்கமும், பொதுமக்களும் 6 இலட்சம் சீனோபார்ம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளனர்.
இந்தத் தடுப்பூசியை யாருக்கு, எங்கு எப்படி வழங்க வேண்டும் என்பதை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். அது இலங்கையின் உள்ளக விவகாரமாகும். அதில் சீனா ஒருபோதும் தலையிடப்போவதில்லை.
மேலும், இலங்கையில் தங்கியுள்ள மூன்று முதல் நான்கு ஆயிரம் வரையிலான சீனர்கள் அந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அதேநேரம் சீனா இதுவரையில் தனது நட்பு நாடுகளுக்காக 133.8 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வழங்கியுள்ளது- என்றார்.