யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில், இலங்கை கடற்படையின் துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த இந்திய மீனவர்களை, யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி பார்வையிட்டுள்ளார்.
பருத்தித்துறை கடற்பரப்பில், அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள், இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது நடவடிக்கையின் போது, கடற்படையின் துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த இரண்டு இந்திய மீனவர்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு மீனவர்களுக்கு காயம் என்பதனால், ஏனைய மீனவர்கள், காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சென்ற யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி, வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தியுடன் கலந்துரையாடிய பின்னர், மீனவர்களைப் பார்வையிட்டார்.
இதேவேளை, காயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் இருவரையும், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேரில் சென்று பார்வையிட்டனர்.
கருணைநாதன் இளங்குமரன் மற்றும் ஜெயானந்தமூர்த்தி றஜீவன் ஆகியோர், தனித்தனியாக வைத்தியசாலைக்கு சென்று, மீனவர்களை பார்வையிட்டனர்.