இலங்கையின் 19 வயதுக்குட்பட்டவர்களைக் கொண்ட தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு, வடக்கு மாகாணம் கிளிநொச்சியில் இருந்து கலையரசி எனும் தமிழ் மாணவி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உள்நாட்டு ஆயுத மோதல் காரணமாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து, இந்த மாணவி மேற்படி அணிக்குத் தெரிவாகியுள்ளமை பல்வேறு தரப்புகளின் கவனங்களையும் ஈர்த்துள்ளது.
கிளிநொச்சி புனித தெரேசா மகளிர் கல்லூரியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் கலையரசிக்கு 16 வயதாகிறது. சிறிய வயதிலிருந்தே – தான் கிரிக்கெட் விளையாடி வருதாக அவர் தெரிவிக்கின்றார்.
கலையரசியின் தந்தை சதாசிவம் – கூலி வேலை செய்பவர், அம்மா சசிகலா – இல்லத்தரசி. ஒரு தம்பியும், தங்கை ஒருவரும் கலையரசியின் உடன் பிறந்தவர்கள்.
‘வயல் வெளிகளில் அண்ணாமார் கிரிக்கெட் விளையாடும் போது, எனது சின்ன வயதில் அவர்களுடன் சேர்ந்து நானும் விளையாடுவேன். எனது அப்பாதான் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளார்’ என்கிறார் கலையரசி.