ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கோர் கோர் குறூப் நாடுகள் முன்வைக்கவுள்ள பூச்சிய வரைபு தேவையற்றது அது பிளவுபடுத்தும் தன்மை கொண்டது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த வரைபு வாக்கெடுப்புக்கு விடப்பட்டாலும் – விடப்படாவிட்டாலும் இலங்கை அதனை எதிர்க்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பில் இங்கிலாந்து, கனடா, ஜேர்மனி, மலாவி, மொன்டினீக்ரோ, வடக்கு மசிடோனியா ஆகிய கோர் குறூப் நாடுகளின் வரைபு கடந்த வாரம் பகிரங்கமானது. அதில், அதிகாரப் பகிர்வு, தேர்தல்களை நடத்துதல், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அவலநிலையை நிவர்த்தி செய்தல், பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்குதல் – மாற்றுதல், எதிர்ப்பு போராட்டங்கள் மீதான வன்முறைகளுக்கு பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் உள்ளது. வரைபு குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தபோதே அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு குறிப்பிட்டார். இந்த தருணத்தில் இது தேவையற்ற விடயம் என நாங்கள் அவர்களுக்கு தெளிவாகத் தெரிவித்துள்ளோம். பிளவுபடுத்தும் எந்தப் பொறி முறையையும் இந்த தருணத்தில் விரும்பவில்லை. எங்களுக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவே அவசியம். தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும் உள்நாட்டு பொறிமுறை மூலம் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமை. இலங்கையர்கள் என்ற அடிப்படையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் உள்நாட்டு பொறிமுறை மூலம் உருவாக்குவது எங்களின் கடமையாகும் இது தொடரும். எந்த சர்வதேச பொறிமுறையும் எங்கள் அரசமைப்பை மீறும் வகையில் அமைந்திருக்கும். போதிய ஆதரவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் இந்த தீர்மானத்தை எதிர்ப்போம். ஏனென்றால் எங்களால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.