இலங்கை மின்சார சபை மற்றும் கனியவள கூட்டுத்தாபனம் என்பனவற்றை மறுசீரமைக்க நடவடிக்கை.

0
161

மறுசீரமைப்பு குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டதன் பின்னர் இலங்கை மின்சார சபை மற்றும் கனியவள கூட்டுத்தாபனம் என்பனவற்றை மறுசீரமைக்க எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபை மற்றும் கனியவள கூட்டுத்தாபனம் என்பனவற்றை மறுசீரமைக்கும் செயற்பாட்டை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்பு முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரத்தில் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. மறுசீரமைப்பு குழுவின் இறுதி அறிக்கையை அடுத்த வாரம் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றிற்கு அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர் மின்சார சபை மற்றும் கனியவள கூட்டுத்தாபனம் என்பனவற்றை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதேவேளை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ள போதிலும் தொடர்ந்தும் எரிபொருளை விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முச்சக்கர வண்டிகளுக்காக வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கத்தை எதிர்வரும் வாரம் முதல் அதிகரிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தற்போது தனியார் பேருந்துகளும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருளை பெற்றுக்கொள்கின்றன. இந்த நிலையில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் சகல வாகனங்களுக்கும் தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக தேவையான எரிபொருள் ஒதுக்கத்தை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது என காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.