26 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இலங்கை வலைப்பந்தாட்டத்தின் சொத்து தர்ஜினி என்கிறார் அவுஸ்திரேலிய உதவி பயிற்றுநர்

இலங்கை வலைபந்தாட்டத்தின் சொத்து தர்ஜினி சிவலிங்கம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். எனவும் தென் ஆபிரிக்காவில் இந்த வருடம்நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் இலங்கை அணி சாதிப்பதற்கு அவரது பிரசன்னம் மிகவும் அவசியம் எனவும் ‘வீரகேசரி’க்கு அவுஸ்திரேலிய வலைபந்தாட்ட உதவிப் பயிற்றுநர் நிக்கோல் றிச்சர்ட்ஸ்சன் தெரிவித்தார்.

அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தர்ஜினியின் வலைபந்தாட்டத் திறன் குறித்து கேட்டபோதே அவர் இந்தப் பதிலைக் கூறினார்.

இதேவேளை, அவுஸ்திரேலியாவில் உலகத் தரம்வாய்ந்த சர்வதேச வீராங்கனைகளுடன் இணைந்து விளையாடக் கிடைத்ததைப் பாக்கியமாக கருதுவதாகக் குறிப்பிட்ட தர்ஜினி சிவலிங்கம், இங்கு விளையாடுவதன் மூலம் தனது திறமை மென்மேலும் அதிகரிக்கிறது என்றார்.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் தற்போது நடைபெற்றுவரும் விக்டோரியா லீக் வலைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றும் சிட்டி வெஸ்ட் ஃபெல்கன்ஸ் அணியில் 6ஆவது வருடமாக இலங்கையின் நட்சத்திர வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் இடம்பெறுகிறார்.

உலக வலைபந்தாட்ட அணிகளுக்கான தரவரிசையில் முதலாம் இடத்தில் இருக்கும் அவுஸ்திரேலியாவில், தொழில்சார் வலைபந்தாட்டப் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் ஜினி (தர்ஜினி) சிறந்த அனுபவத்தைப் பெறுவதுடன் அவரது உடற்தகுதியிலும் பெரும் முன்னேற்றம் காணப்படுவதாக நிக்கோல் குறிப்பிட்டார்.

பலசாலிகளான அவுஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு ஈடுகொடுத்து விளையாடுவதில் இலங்கை வீராங்கனைகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வரும் நிலையில் தர்ஜினி எவ்வாறு ஈடுகொடுத்து விளையாடுகிறார் என அவரிடம் கேட்டபோது,

‘வலைபந்தாட்ட விளையாட்டில் நிறைய விடயங்களைக் கற்பதிலும் சவால்களை எதிர்கொள்வதிலும் ஜினி மிகவும் ஆர்வமாக இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்னர் இளம் வீராங்கனைகயாக இங்குவருகை தந்த அவரது வலைபந்தாட்ட ஆற்றல் குறையவில்லை என்றே கூறவேண்டும். அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். 

எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளக்கூடிய மன உறுதி அவரிடம் இருக்கிறது. எனவே தென் ஆபிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் இலங்கை அணியில் அவர் இடம்பெறுவது மிகவும் அவசியம் என நான் கருதுகிறேன்’ என்றார் நிக்கோல்.

அவுஸ்திரேலியாவில் தர்ஜினியை எல்லோரும் ஜினி என்று செல்லமாக அழைத்துவருகின்றனர்.

அட்லான்டா 1996 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பெண்களுக்கான மென்பந்து போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அவுஸ்திரேலிய அணியிலும் மென்செஸ்டர் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான மென்பந்து போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அவுஸ்திரேலிய அணியிலும் நிக்கோல் றிச்சர்ட்ஸ்சன் இடம்பெற்றிருந்தார்.

இது இவ்வாறிருக்க, பத்து அணிகள் பங்குபற்றும் விக்டோரியா லீக் வலைப்நதாட்டப் போட்டி தற்போது நடைபெற்றுவருவதுடன் தர்ஜினி விளையாடும் அணியான சிட்டி வெஸ்ட் ஃபெல்கன்ஸ் தனது ஆரம்பப் போட்டியில் ஜீலோங் கௌகார்ஸ் அணியை ஞாயிற்றுக்கிழமை (19) சந்திக்கவுள்ளது.

அப் போட்டியில் 6ஆவது வருடமாக சிட்டி வெஸ்ட் ஃபெல்கன்ஸ் அணியில் தர்ஜினி சிவலிங்கம் இடம்பெறுகிறார்.

மெல்பர்னில் அமைந்துள்ள அல்டோனா நகரை மையமாகக் கொண்டு விளையாடும் நடப்பு சம்பியன் ஃபெல்கன்ஸ் அணி இந்த வருடமும் சம்பியனாகும் குறிக்கோளுடன் பங்குபற்றவுள்ளதாக தர்ஜினி சிவலிங்கம் குறிப்பிட்டார்.

இரண்டு கட்டங்களாக நடைபெறும் லீக் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் ஒன்றையொன்று இரண்டு தடவைகள் எதிர்த்தாடும் எனத் தெரிவித்த தர்ஜினி சிவலிங்கம், உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிக்கு தன்னை தயார்படுத்த இந்த சுற்றுப் போட்டி பெரிதும் உதவும் என்றார்.

விக்டோரியா லீக் வலைபந்தாட்டப் போட்டியில் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தும் வீராங்கனைகள் சன்கோர்ப் சுப்பர் வலைபந்தாட்டப் போட்டியில் விளையாட தகுதிபெறுவர். சன்கோர்ப் சுப்பர் வலைபந்தாட்டத்திலிருந்தே அவுஸ்திரேலிய தேசிய வீராங்கனைகள் தெரிவு செய்யப்படுவர்.

சிங்கப்பூரில் 2018இலும் 2022இலும் நடைபெற்ற ஆசிய கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகளில் இலங்கை சம்பியனாவதற்கு தர்ஜினி சிவலங்கம் பெரும் பங்காற்றியிருந்தார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி ஒலிம்பிக் உள்ளக அரங்கில் 2015இல் நடைபெற்ற உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் தர்ஜினி இல்லாத இலங்கை சகல போட்டிகளிலும் தோல்வி அடைந்து 16ஆவது இடத்தைப் பெற்றது.

ஆனால், 4 வருடங்கள் கழித்து இங்கிலாந்தின் லிவர்பூல் உள்ளக அரங்கில் நடைபெற்ற உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் தர்ஜினி சிவலிங்கத்தின் பிரதான பங்களிப்புடன் சிங்கப்பூரை 2 தடவைகள் வெற்றிகொண்ட இலங்கை ஒட்டுமொத்த நிலையில் 15ஆம் இடத்தைப் பெற்றது. 2019 உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தில் 7 போட்டிகளில் தர்ஜினி மொத்தமாக 348 கோல்களைப் புகுத்தி வரலாறு படைத்திருந்தார்.

2019 உலகக் கிண்ணப் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக லிவர்பூலில் வைத்து தர்ஜினி தெரிவித்த போதிலும் 3 வருடங்கள் கழித்து ஆசிய வலைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றி தனது அதிகபட்ச பங்களிப்பின் மூலம் இலங்கையை ஆசிய சம்பியனாக உயர்த்தியிருந்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles