பிரிட்டிஷ் இளவரசரும் எடின்பரோ கோமகனுமான ஃபிலிப்பின் இறுதி நிகழ்வு வின்சர் கோட்டை வளாகத்தில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நேற்று சனிக்கிழமை மாலையில் நிறைவடைந்தது. அவரது உடல் அடங்கிய சவப்பேழை, புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையொட்டி இறுதி நிகழ்வில் பங்கேற்ற அரச குடும்ப உறுப்பினர்கள் துக்கம் அனுசரித்து தேவாலயத்தில் நடந்த சேவையில் பிரார்த்தனை செய்தனர்.
புனித ஜார்ஜ் தேவாலயத்துக்கு கொண்டு வரப்பட்ட அவரது பூதவுடல், பிரார்த்தனை சேவை முடிந்ததும் வின்சர் கோட்டை உள்ளரங்கத்தில் சவப்பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக தொடங்கிய இறுதி நிகழ்வு ஊர்வலத்தில் இளவரசர் ஃபிலிப்பின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். கோமகனின் தனிச்செயலாளர் பிரிகேடியர் மில்லர் பேக்வெல், மெட்ரோபாலிட்டன் காவல்துறையினருடனும் அவரது இரண்டு முன்னாள் மெய்க்காப்பாளர்களுடன் பங்கேற்றார்.
தனது இறுதி நிகழ்வின்போது எத்தகைய பேண்டு வாத்திய குழு இருக்க வேண்டும் என இளவரசர் ஃபிலிப் விரும்பியிருந்தாரோ அந்த குழுவினர் பங்கேற்ற வாத்தியம் இசைக்கப்பட்டது.
இளவரசரால் விரும்பப்பட்டு மாற்றி வடிவமைக்கப்பட்ட லேண்ட் ரோவர் காரில் அவரது பூத உடல் வைக்கப்பட, ஜெருசலேம், எல்கரின் நிம்ரோத் பேண்டு வாத்திய குழுவினர் இசை முழங்க ஊர்வலம் சென்றது.
தனது கணவரின் இறுதி நிகழ்வில் பங்கேற்பதற்காக அரசி எலிசபெத், வின்சர் கோட்டையில் இருந்து பென்ட்லி ரக காரில் புறப்பட்டார்.
இளவரசரின் மறைவுச் செய்தியை அறிவித்த பிறகு தற்போதுதான் அவர் கோட்டையை விட்டு வெளியே வருகிறார். அப்போது வாயிலில் அணிவகுத்திருந்த பேண்டு வாத்திய குழுவினர் தேசிய
இளவரசர் ஃபிலிப்பின் மூத்த பிள்ளைகள், வேல்ஸ் இளவரசர் மற்றும் ராயல் இளவரசி இறுதி ஊர்வலத்தில் முன்னின்று நடக்க, உடன் பிறந்தவர்களான வெஸ்ஸெக்ஸ் மற்றும் யார்க் கோமகன் பின்தொடர்ந்து சென்றனர்.
மூன்றாவது வரிசையில் சஸ்ஸெக்ஸ் கோமகன், கேம்ப்ரிட்ஜ் கோமகனும் அவர்களுக்கு இடையே பீட்டர் ஃபிலிப்ஸ{ம் சென்றனர்.
இதையடுத்து தேவாலயத்தை பூதவுடல் அடைந்ததும், இளவரசரின் உடல் வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டு இடப்பக்கமாக கொண்டு செல்லப்பட்டது.
இதேவேளை அரசி தேவாலயத்தை அடைந்ததும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. கென்டர்புரி பேராயர் அவரை அழைத்துக் கொண்டு உள்ளே
பின்னர் திருப்பலிக்காக தேவாலயத்துக்குள் இளவரசரின் பூதவுடல் அடங்கிய சவப்பேழை கொண்டு செல்லப்பட்டது.
அங்கு தேவாலயத்துக்குள் இறுதி அஞ்சலித் திருப்பலியை பேராயர் வழிநடத்தினார்.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நடைமுறைப்படி தேவாலயத்துக்குள் திருப்பலி நடக்கும்போது அரசி எலிசபெத் தனிமையில் அமர்ந்திருந்தார். அவருக்கு இரண்டு இருக்கைகள் இடைவெளி விட்டு யார்க் கோமகன் இருந்தார்.
தேவாலயத்துக்குள் இருந்த மதகுருமார்கள் உள்ளிட்டோர் பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து, இளவரசருக்குரிய இறுதி மரியாதை செலுத்தும் குழுவுக்கு பொறுப்பு வகித்த கார்டர் பிரின்சிபல் கிங் ஆஃப் ஆர்ம்ஸ் குழுவின் முதன்மை ஆலோசகர், எடின்பரோ கோமகன் அவரது வாழ்நாளில் வகித்த பதவிகளின் பட்டியலை வாசித்தார்.
மெரியோனெத் எர்ல், கடற்படையின் அட்மிரலின் பேரன் கிரீன்விச், ராணுவத்தின் ஃபீல்டு மார்ஷல், பிரிட்டன் விமானப்படையின் மார்ஷல் என தொடங்கிய அந்த பட்டியல், கடைசியாக அரசியின் கணவர் என்ற பதவியுடன் முடிந்தது.
இதைத்தொடர்ந்து, தனது கணவரின் இறுதி நல்லடக்கத்தின்போது எத்தகைய மலர்கள் அவரது சவப்பெட்டியை அலங்கரிக்க வேண்டும் என அரசி விரும்பியிருந்தாரோ அந்த மலர்கள், இளவரசர் பணியாற்றிய கடற்படை கப்பலின் கொடி போர்த்தப்பட்ட சவப்பேழையில் வைக்கப்பட்டிருந்தன. இளவரசர் கடற்படை பணியின்போது பயன்படுத்திய வாள் மற்றும் கடற்படை தொப்பியுடன் சேர்த்து புனித தேவாலயத்தின் உள்ளரங்கத்தில் இருந்த 12 அடி குழிக்குள் அவரது உடல் இடம்பெற்ற சவப்பேழை இறக்கப்பட்டது.
அப்போது தேவாலயத்தின் தலைமை ஆயர், “இந்த உலக பயணத்தை விட்டு விடை பெறுங்கள், கிறிஸ்துவ ஆன்மாவே,” என்று பிரார்த்தனை செய்தார். அதைத்தொடர்ந்து அந்த சவப்பேழை இறக்கப்பட்ட குழி, மார்பிள் கல் மூலம் பத்திரமாக மூடப்பட்டது. இந்த நிகழ்வு நடந்த அதே சமயம், கோட்டை தேவாலயத்துக்கு வெளியே சோக கீதம் முழங்கப்பட்டது.
முன்னதாக, தனது கணவரின் சவப்பேழை குழிக்குள் இறக்கப்படும் காட்சியை தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்றவாறு பார்வையிட்டு தமது துக்கத்தை அனுசரித்தார் அரசி எலிசபெத்.
இத்துடன் அரச குடும்பத்தின் மிக மூத்த நபரான இளவரசர் ஃபிலிப்பின் இறுதி நிகழ்வு நிறைவுக்கு வந்தது.
இறுதி நிகழ்வு நிறைவடைந்த அதே வேளை, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது உத்தியோகபூர்வ இல்லத்துக்கு வெளியே வந்து மௌன அஞ்சலி செலுத்தினார். அந்த காட்சி அவரது ட்விட்டர் பக்கத்திலும் பகிரப்பட்டிருந்தது.