இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்பு!

0
226

இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தலி பென்னட் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார். பெஞ்சமின் நெதன்யாகு தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள எடுத்த முயற்சிகள் தோல்வியுற்றன.
ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், 60 எம்.பி.க்கள் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர், 59 எம்.பி.க்கள் எதிராக வாக்களித்தனர். இதன் மூலம், 12 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் நீடித்த பெஞ்சமின் நெதன்யாகுவின் பதவிக்காலம் முடிவடைந்தது.
இஸ்ரேலில் இந்த 8 கட்சி அரசாங்கம் சாதாரண பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இந்த கூட்டணிக்கு வலதுசாரி யமினா கட்சியின் தலைவர் நாப்தாலி பென்னட் தலைமை தாங்குகிறார். புதிய அரசாங்கத்தில் 27 அமைச்சர்கள் உள்ளனர், அவர்களில் ஏழு பெண்கள். வெவ்வேறு சித்தாந்தங்கள் கொண்ட கட்சிகள் புதிய அரசு அமைக்க ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளன. கூட்டணியில் வலதுசாரி, இடது, மையவாதியுடன், அரபு சமூகத்தை சேர்ந்த ஒரு கட்சியும் உள்ளது.
முன்னதாக, 71 வயதான நெதன்யாகுவின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் பென்னட்டின் உரையைத் தடுக்க முயன்றனர். சட்டமன்ற உறுப்பினர்களின் சலசலப்புக்கு மத்தியில், மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட மக்களுடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமைப்படுவதாக பென்னட் கூறினார். இந்த முக்கியமான காலகட்டத்தில் நாங்கள் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்கிறோம் என்று பென்னட் கூறினார். நாட்டில் நிலவும் நெருக்கடி நிலையிலிருந்து வெளியேற தேர்தல்கள் மிக முக்கியமானவை என்று அவர் கூறினார்.
இஸ்ரேலில் இரண்டு ஆண்டுகளுக்குள் நான்கு முறை தேர்தல்கள் நடைபெற்ற போதிலும் தெளிவான பெரும்பான்மை முடிவுகள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பெஞ்சமின் நெதன்யாகுவை பதவியிலிருந்து நீக்க எதிர்கட்சிகள் கை கோர்த்து வெற்றி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது