இஸ்ரேல் – காசா போர் 12 ஆவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.
இஸ்ரேல் காசாவிலுள்ள அலி அராப் மருத்துவமனை மீது நடத்திய வான்வழி குண்டுத் தாக்குதல்களில் சுமார் ஐந்நூறு பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள காசான் அபு சித்தா என்ற வைத்தியர், அடையாளம் காண முடியாதளவுக்கு பலரது உடல்கள் சிதைந்து காணப்பட்டன.
உயிரிழப்பு எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும். ஏனென்றால் கட்டிட சிதைவுகளுக்குள் பலர் சிக்கியிருந்தனர் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலை பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நாகரிக சக்திகளுக்கும் மிருகத்தனமான சக்திகளுக்கும் இடையிலான போர் இதுவென்று இஸ்ரேல் பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியிடம் விளக்கியுள்ளார்.
ஹமாஸ் படையினரை ஒழிப்பதற்கு அமெரிக்க இயன்றளவு உதவிகளை வழங்கும் என ஜோ பைடன் இதன்போது உறுதியளித்துள்ளார்.

மேலும், இருதரப்பு மோதலை உடனடியாக நிறைவுக்கு கொண்டுவருமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் என்டோனியோ குட்டெரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹமாஸ் நடத்திய தாக்குதல் காரணமாக ஒட்டுமொத்த பாலஸ்தீனர்களும் தண்டிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சில மணிநேரங்களுக்கு முன்னர் காசாவின் தெற்கு பகுதியிலுள்ள நகரமான கான் யூனிஸ் மீது வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டள்ளன. அங்கு பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
• காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 3,478 ஆக உயர்வு, 10,859 பேருக்கு காயம்
• இஸ்ரேலில் 1,403 பேர் உயிரிழப்பு, 3,800 பேருக்கு காயம்
• காசாவில் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் எதிர்ப்பு
• ஈரான், ஜோர்தான், லெபனான், டுனீசியா ஆகிய நாடுகளில் போராட்டம்
• காசா மிக மோசமான நிலையில் உள்ளதாக அறிவித்தது யுனிசெப்
• மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனம்