ஈரானின் எத்தகைய தாக்குதலையும் சந்திக்க தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் அறிவித்து உள்ளார்.
ஈரானில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தலைவர்கள் அடுத்தடுத்து மரணமடைந்ததை தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த படுகொலைகளுக்கு இஸ்ரேல்தான் காரணம் என கூறப்படும் நிலையில் அதன்மீது போர் தொடுக்க ஈரான் மற்றும் அதன் ஆதரவு நாடுகள் ஆயத்தமாகி வருகின்றன. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா, ஏமனில் உள்ள ஹவுத்தி தீவிரவாதிகள் மற்றும் ஈரான் ராணுவம் ஆகியவை ஒரே நேரத்தில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், டெல்டா, யுனைடெட், லுப்தான்சா, ஏர் இந்தியா உள்ளிட்ட பல வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இஸ்ரேலுக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தியுள்ளன.
இதற்கிடையே, வடக்கு இஸ்ரேல் பகுதிகள் மீது நேற்று அதிகாலை ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில், 2 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதை இஸ்ரேலிய ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது. தெற்கு லெபனானில் பல கிராமங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மற்றும் படுகொலைகளுக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் ஆதரவு பெற்ற ஹில்புல்லா அமைப்பு கூறியுள்ளது.
இந்நிலையில், காசாவில் 2 பள்ளிகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர். ஆனால், ஹமாஸ் இலக்குகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
இதற்கிடையே, போர் சூழலை தடுக்கும் விதமாக ஜோர்டானின் வெளியுறவு அமைச்சர், ஈரான் வெளியுறவு அமைச்சரை டெஹ்ரானில் சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கூறும்போது, ‘ஈரானின் தீய சக்திக்கு எதிராக இஸ்ரேல் பலமுனை போரில் ஈடுபட்டுள்ளது. ஈரானின் எத்தகையை தாக்குதலையும் சந்திக்க இஸ்ரேல் தயாராக இருக்கிறது” என்று தெரிவித்தார்.