உக்ரைன் மீது, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைப் பயன்படுத்தி, ரஸ்யா தாக்குதல் நடாத்தியமை, பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உக்ரைனுக்கு ஏவுகணை உதவிகளை வழங்கும் நாடுகள் மீதும் தாக்குதல் நடாத்தப்படும் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பல ஆயிரம் கிலோமீற்றர் தூரம் சென்று தாக்கக் கூடிய ஐ.சி.பி.எம் ரக ஏவுகணையை, தமக்கு மிக அருகில் இருக்கக் கூடிய உக்ரைன் மீது தாக்குதவற்காக
ரஸ்யா பயன்படுத்தியிருந்தது.
இந்நிலையில், ரஸ்ய ஜனாதிபதி அந்நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றினையும் ஆற்றியுள்ளார். அவ் உரையில், ரஸ்யாவின் புதிய ஏவுகணையைத் தடுப்பதற்கு அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புக்களால் முடியாது. இது ஒலியின் வேகத்தை விட பத்து மடங்கு அதிவேகத்தில் பயணிக்கும். ரஸ்யாவைத் தாக்குவதற்காக ஏவுகணைகளை வழங்கும் உக்ரைனின் நட்பு நாடுகளுக்கு எதிராகவும் இது பயன்படுத்தப்படும்.
எங்கள் நாட்டுக்கு எதிராக ஆயுதங்களை பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகளின் இராணுவத்திற்கு எதிராக, எங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த எமக்கு உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகின்றோம். உக்ரைனின் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம். இது குறித்து மேற்கத்தைய நாடுகள் தீவிரமாக சிந்திக்க வேண்டும் என புடின் குறிப்பிட்டுள்ளார்.