ஜப்பான் மற்றும் ஜி7 நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியிடம், ஜப்பான் பிரதமர், உறுதி அளித்துள்ளார்.
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா நேற்று திடீர் விஜயமாக உக்ரைனுக்கு சென்றுள்ளார்.
அரச முறை பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்த புமியோ கிஷிடா பிரதமர் மோடியை சந்தித்து பேசிய சில மணி நேரங்களுக்கு பின்னர் உக்ரைனுக்கு சென்றுள்ளார்.
விமானம் மூலம் போலந்து சென்றடைந்த அவர், ரயிலில் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார். அங்கு அவரை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வரவேற்றார்.
தொடர்ந்து இருவரும் போர் நிலவரம் குறித்தும், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது ஜப்பான் மற்றும் ஜி7 நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என, புமியோ கிஷிடா உறுதி அளித்துள்ளார்.
இதேவேளை ஜப்பான், உக்ரைனுக்கு இதுவரை 7 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இராணுவ மற்றும் நிதி உதவிகளை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.