உக்ரைன் யுத்தம்: வரலாற்றுப் பின்னணியும் நிகழ்கால விபரீதமும்!

0
288

ஆகாயம், நிலம், கடல் ஆகிய மூன்று மார்க்கங்களின் வழியாகவும் ரஷ்யா, உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடங்கியதை அடுத்து, ஐரோப்பாவும் ஒட்டுமொத்த உலகமும் அதிர்ச்சியிலும் கவலையில் ஆழ்ந்திருக்கின்றன. அண்டை நாடான உக்ரைனைத் தாக்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை ரஷ்யா மாதக்கணக்கில் மேற்கொண்டு வந்தாலும், அந்நாட்டின் மீது படையெடுக்க மாட்டோம் என்று சொல்லிவந்ததை மீறி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சிறப்பு நடவடிக்கை எனும் பெயரில் தாக்குதலுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்யத் தாக்குதலை எதிர்கொள்வோம் என உக்ரைன் அறிவித்துள்ள நிலையில் போரும் பாதிப்பும் தீவிரமாகும் என்றே அஞ்சப்படுகிறது. உக்ரைன் மக்களின் நிலை பரிதாபமாகவே இருக்கிறது. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ரஷ்ய நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்து, பல்வேறு பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன.

உலக நாடுகளின் கண்டனம், பொருளாதாரத் தடைகள் பற்றி எல்லாம் ரஷ்ய அதிபர் புதின் கவலைப்படுவதாகத் தோன்றவில்லை. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையில் அவர் உறுதியாக இருக்கிறார். ரஷ்யாவின் யுத்தச் செயல்பாட்டில் குறுக்கிட்டால் நினைத்துப்பார்க்காத விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என அவர் எச்சரித்திருக்கிறார்.

ரஷ்யாவின் தாக்குதல் எந்த அளவு தீவிரமாகும், எத்தனை நாள் நீடிக்கும் என்பது தெரியாத நிலையில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பா மோசமான ராணுவச் சூழலை எதிர்கொள்ள உள்ளது. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் நேரடியாக யுத்தத்தில் தலையிடாது என்றாலும், உக்ரைனுக்கு ஆயுத சப்ளை உள்ளிட்டவற்றை தாராளமாக மேற்கொள்ளும் என்பதால் ரஷ்யா நினைக்கும் அளவுக்கு அத்தனை எளிதாக இந்தத் தாக்குதல் முடிவுக்கு வர வாய்ப்பில்லை.

ஜெர்மனி அதிபர் கூறியதுபோல, யுத்தத்துக்கான விலையை உக்ரைனே கொடுக்க வேண்டியிருக்கும் என்பதுதான் துயரம். உக்ரைன் மட்டும் அல்ல, ரஷ்யாவையும் யுத்தம் பாதிக்கும். அகில உலகையும் விட்டு வைக்காது. ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கி, பங்குச் சந்தைகள் ஆட்டம்காணத் தொடங்கிவிட்டன.

spacer.png

எதற்காக இந்த யுத்தம்? 

ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் மீது ஏன் தாக்குதல் நடத்த வேண்டும்? இந்தக் கேள்விக்கான பதில் கொஞ்சம் சிக்கலானது. வெளிப்படையாகச் சொல்லப்படும் பல்வேறு காரணங்களுக்குப் பின் மறைந்திருக்கும் உள்நோக்கங்களையும், உலக அரசியலையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

44 மில்லியன் மக்களைக் கொண்ட ஐரோப்பிய ஜனநாயக நாடு மீது ரஷ்யா முழு வீச்சிலான தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது எனும் பிபிசி செய்தி வாசகம், இந்தப் பிரச்சினையை அழகாகப் புரிய வைக்கிறது.

உக்ரைன் ஜனநாயகமாக இருப்பதுதான் பிரச்சினை என்றாலும் அது மட்டுமே பிரச்சினை அல்ல. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமான வரலாற்று உறவின் விளைவாக உருவாகியிருக்கும் இந்தப் பிரச்சினையில் சர்வதேச அரசியலும் பின்னிப் பிணைந்திருக்கிறது.

பரவலாக அறியப்பட்டதுபோல, ரஷ்யாவின் அண்டை நாடாக இருக்கும் உக்ரைன், சோவியத் யூனியனில் அங்கமாக இருந்தது. சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு 1991இல் உக்ரைன் தனி நாடானது. அதன் பிறகு ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் பிரச்சினை இருந்து வருகிறது. சுதந்திர நாடாக இருக்க விரும்பும் உக்ரைனுக்கும் அதைக் கட்டுப்படுத்த விரும்பும் ரஷ்யாவுக்குமான பிரச்சினை இது எனச் சொல்லலாம்.

ஒருகாலத்தில் வல்லரசான ரஷ்யா, பல காரணங்களினால் அண்டை நாடுகள் தன் கைப்பாவையாக இருப்பதையே விரும்பியது. அதற்கேற்ப அங்கு தனது ஆதரவு பொம்மை அரசுகளையும் நிறுவி வந்தது. ராணுவ ஆதிக்கமும் செலுத்திவந்தது.

ஆனால், சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து வந்த உக்ரைன் மக்கள் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையுமே பெரிதும் விரும்பினர். அதோடு தங்களுக்கான தனித்த கலாச்சார அடையாளத்தையும் பாதுகாக்க விரும்பினர். எனவே ரஷ்ய ஆதரவு பெற்ற ஊழல் ஆட்சியாளர்களுக்கு எதிராகச் செயல்பட்டனர். இவ்வாறு இரண்டு முறை உக்ரைனில் மக்கள் புரட்சி வெடித்திருக்கிறது.

2014இல் ரஷ்ய ஆதரவு ஆட்சி அகற்றப்பட்டபோது, ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்த போரின்போது கிரிமியா பகுதியைப் பிடித்துக்கொண்ட ரஷ்யா அதன் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்து புதின் இப்போது யுத்தம் தொடுத்திருக்கிறார்.

spacer.png

உக்ரைனில் நிலவும் யதார்த்தம்

இதனிடையே உக்ரைன் அரசியல்வாதிகள் மீது அந்நாட்டு மக்கள் முற்றிலும் நம்பிக்கை இழந்து, ஒரு பொதுத்தேர்தலில் நடிகரும் யூடியூப் பிரபலமுமான தற்போதைய அதிபர ஜெலன்ஸ்கியைத் தேர்தலில் தேர்வு செய்தனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உக்ரைன் மேற்கின் பக்கம் சாய்ந்ததும் முக்கியமாக நேட்டோ அமைப்பில் சேர ஆர்வம் காட்டியதும் இதற்கு முக்கிய காரணம். உக்ரைன் தனக்குக் கட்டுப்படாமல் இருப்பது புதினுக்கு உறுத்தலாக இருக்கிறது. நேட்டோ படைகளை உக்ரைன் எல்லைக்குள் அனுமதிப்பது ரஷ்ய ஆதிக்கத்துக்கான அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என்றும் அவர் அஞ்சினார்.

உக்ரைனை நேட்டோ அமைப்புக்குள் உறுப்பினராகச் சேர்க்கக் கூடாது என அமெரிக்காவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருந்தார் புதின். ஜனநாயகத்தை விரும்பிய உக்ரைன், ரஷ்யாவின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டுமானால் நேட்டோ ஆதரவு வேண்டும் என நினைத்தது. அதோடு அந்நாட்டு மக்களுக்கும் மேற்கின் மீதே ஈர்ப்பு இருந்ததாகவும் கொள்ளலாம்.

இந்த விஷயங்கள் எல்லாம் நீறு பூத்த நெருப்பாக இருந்த நிலையில், உக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் அல்லது போராளிகளை ரஷ்யா ஊக்குவித்து அந்தப் பகுதிகளை உக்ரைனுக்குக் கட்டுப்படாத பகுதிகளாக்கியது. புரட்சியாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி அண்மையில் இந்த இரண்டு மாகாணங்களைத் தனிநாடாக அறிவித்தது.

உக்ரைனில் உள்ள இரண்டு கிளர்ச்சி மாகாணங்களை ரஷ்யா தனி நாடாகத் தன்னிச்சையாக அறிவித்தது சர்வதேச நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதோடு, உக்ரைனில் படைகளை நிறுத்தவும் வழி வகுத்தது. இதனிடையே நேட்டோ விஷயத்தில் உக்ரைனை எச்சரித்தபடி, எல்லைப் பகுதியில் ரஷ்யா படைகளைக் குவித்துவந்தது.

புதினின் போக்கில் ஏற்பட்ட மாற்றம்

மேற்கின் அரசியல், நேட்டோவைத் தள்ளி வைப்பது. இவற்றை எல்லாம் மீறி உண்மையிலேயே புதினுக்கு ஆதிக்க ஆசை வந்துவிட்டது என நினைக்க வைக்கும் வகையில், அண்மைக் காலமாக அவரது சொல்லாடம் மாறத் தொடங்கியது. வரலாற்று நோக்கில் ரஷ்யாவும் உக்ரைனும் நெருங்கிய பந்தம் கொண்டது என புதின் பேசினார். இரு நாடுகளும் ஒரே வரலாற்றைப் பகிர்ந்துகொள்கின்றன என்று கூறினார். இதன் மூலம் உக்ரைன் தனி நாடு, சுதந்திர நாடு என்பதை ஏற்க மறுப்பது போல நடந்துகொண்டார்.

சொந்த நாட்டில் தனது செல்வாக்கை நிறுத்திக்கொள்ளவும் விரும்பியவர், அமெரிக்கா சொல்வதையெல்லாம் கேட்கும் நபர் தான் இல்லை என உறுதியாகக் காண்பிக்க விரும்பினார். இதுதான் புதினின் யுத்தமாக வெடித்திருக்கிறது.

ஆனால், இதற்கான விலையை அனைவரும் சேர்ந்தே கொடுக்க வேண்டியிருக்கும்.

சைபர் சிம்மன்