ரஷ்யாவின் தொடர் எறிகணை வீச்சுகளுக்கு மத்தியில் உணவு, தண்ணீர், மருத்துவம் என எந்த வசதியும் இல்லாமல் மரியூபோல் நகரில் ஒரு இலட்சம் மக்கள் சிக்கியுள்ளனர் என்று உக்ரைன் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
“இன்றைய நிலவரப்படி மரியூபோல் நகரில் சுமார் ஒரு இலட்சம் மக்கள் உள்ளனர். மனிதாபிமானமற்ற சூழ்நிலையில் ரஷ்ய படையெடுப்பால் உணவு, தண்ணீர், மருந்து இல்லாமல் இருக்கின்றனர். தொடர்ச்சியான எறிகணை வீச்சு, குண்டுவெடிப்புக்கு மத்தியில் இவர்கள் உள்ளனர்”, என்று நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சமூக ஊடக உரையில் தெரிவித்தார்.
தற்காலிக போர் நிறுத்தம் மூலம் மக்களை மீட்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர் எறிகணை வீச்சுக்களால் தடைப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை மக்களை வெளியேற்றிய உக்ரைன் அரச ஊழியர்களும் அவர்களின் பேருந்து சாரதியையும் ரஷ்ய இராணுவம் சிறைப் பிடித்துள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.