நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளிலிருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டியது அவசியமாகும் என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (20) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாடு என்ற முறையில் நாம் பாரிய பொருளாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து இருக்கின்றோம். கட்சி என்ற ரீதியில் இதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.
நாட்டு மக்களுக்கு வாழ முடியாத ஒரு சூழல் நாட்டில் தற்போது உருவாகியுள்ளது.
அரசாங்கம் என்ற முறையில் இந்த பிரச்சினையிலிருந்து மீண்டெழுவதற்கே நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
கூடிய விரைவில் இந்த பிரச்சினைகளிலிருந்து எவ்வாறு மீண்டெழுவது, மக்களை எவ்வாறு பிரச்சினைகளிலிந்து மீட்டெடுப்பது என்பது குறித்தே நாம் சிந்தித்து வருகின்றோம்.
ஒரு புறத்தில் மக்களின் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
மறுபுறுத்தில் உணவு பாதுகாப்பை ஏற்படுத்திக்கொண்டு அரசாங்கம் என்ற முறையில் அடுத்தக்கட்ட வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டியது அவசியமாகும்.
நாட்டின் சுற்றுலாத்துறையை பலப்படுத்துவதற்கான முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
இந்த காலக்கட்டமானது சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தரும் காலமாகும். எனவே இந்தக் காலப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரித்துக்கொண்டால் அந்நிய செலாவணி தட்டுப்பாட்டை ஓரளவுக்கு நிவர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும்.
தற்போது மக்கள் வீடுகளில் மரக்கன்றுகள், மரக்கறி செய்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.
இது அவர்களது குடும்பத்தினரை பலப்படுத்துவதை போன்று அரசாங்கத்தை பலப்படுத்தும் செயற்பாடாகவே அமைந்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் நாட்டு மக்களின் பிரச்சினைகளை செவிமடுக்க வேண்டியது அவசியம் என்று அரசாங்கம், ஜனாதிபதி, பிரமதர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு கட்சி என்ற முறையில் கோரிக்கை விடுத்து வருகின்றோம்.
நாட்டு மக்களின் பிரச்சினைகளை செவிமடுக்க வேண்டியது அவசியமாகும்.
மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து அந்த மக்களை மீட்டெடுக்க வேண்டியது அவசியமாகும்.