உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு

0
189

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான நகலை விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இராஜதந்திரிகளுக்கு வழங்கிய பின்னரே பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கின்றார்.
தென்னாபிரிக்க நல்லிணக்க மாதிரியை உள்வாங்குவது தொடர்பில் ஏற்கனவே பேசப்பட்டிருந்தது.
இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு தென்னாபிரிக்க அரசாங்கமும் உதவுவதாக அறிவித்திருந்தது.
2015இல் ஆட்சி மாற்றம் இடம்பெற்றதை தொடர்ந்தும் இவ்வாறான பேச்சுகள் அடிபட்டன.
அரசாங்கம் மட்டுமல்ல, அரசுசாரா நிறுவனங்களும் தென்னாபிரிக்கா தொடர்பில் பேசியிருந்தன.
தென்னிலங்கையிலிருந்தும் வடக்கிலிருந்தும் அரசுசாரா நிறுவனங்களின் ஏற்பாட்டில் தென்னாபிரிக்க பயணங்களையும் பலரும் மேற்கொண்டனர்.
ஆனால், இறுதியில் அனைத்தும் விழலுக்கிறைத்த நீரானது.
ஏனெனில், மைத்திரிபால சிறிசேன – ரணில் அரசாங்கத்தின் முயற்சிகள் அனைத்தும் புதிய அரசியல் யாப்புடன் பிணைக்கப்பட்டிருந்தது.
புதிய அரசியல் யாப்பு முயற்சிகள் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்து நல்லிணக்க முயற்சிகளின் கதையும் முடிவுக்கு வந்தது.
மீண்டும் ரணில் விபத்தாக அதிகாரத்துக்கு வந்திருக்கும் சூழலில் உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் பேசப்படுகின்றது.
யுத்தம் முடிவுற்று 14 வருடங்களாகிவிட்டன.
இந்த 14 வருடங்களில் பல்வேறு சுலோகங்கள் உச்சரிக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால், நல்லிணக்க முயற்சிகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
ஏன் நல்லிணக்க முயற்சிகள் தோல்வியடைந்தன? ஏன் ஆகக்குறைந்தது சிறிதளவுகூட, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்க முயற்சிகளில்
முன்னோக்கி நகர முடியவில்லை? இந்தக் கேள்விகளுக்கான பதிலை உற்றுநோக்காமல் நல்லிணக்கத்தை அடைய முடியாது.
ஏனெனில், நல்லிணக்கம் என்பது அரசுசாரா நிறுவனங்களின் திட்டமல்ல.
இராஜதந்திர சமூகத்திடமும் இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளின் தோல்வி தொடர்பில் தெளிவான புரிதல் இருக்கின்றதா என்பதும்
சந்தேகமே! – ஏனெனில், நாட்டில் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் நல்லிணக்கமான சூழல் ஏற்படவேண்டுமாயின் முதலில் தமிழ் மக்களின் தனித்துவமான பிரச்சினைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
அதற்கான தீர்வொன்று அவசியமென்னும் புரிதல் சிங்கள அரசியல் மற்றும் சிவில் சமூகத்தின் மத்தியில் உருவாக வேண்டும்.
இவை – எல்லாவற்றுக்கும் முதலில், அரசாங்கம் சில விடயங்களை முன்னெடுப்பதில் அரசியல் விருப்புறுதியோடு இருக்கின்றதென்று தமிழ் மக்கள் நம்புவதற்கான அரசியல் சூழல் உருவாக வேண்டும்.
அரசமைப்பில் இருப்பவற்றையே அமுல்படுத்துவதற்கு ஆற்றலற்றிருக்கும் அரசாங்கம் நல்லிணக்க முயற்சியில் முன்னோக்கிப் போவதாகக் கூறுவதை எவ்வாறு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியும்? நல்லிணக்கம் என்பது இரண்டு வேறுபட்ட கலாசாரம் மற்றும் அரசியல் பின்பலமுள்ள மனிதர்களுக்கு இடையிலான விவகாரமல்ல – மாறாக இது ஒரு தேசிய இனத்தின் அரசியல் இருப்பு தொடர்பான பிரச்சினை.
அதற்கான முறையான ஏற்பாடுகள் இல்லாமல் ஒருபோதும் நல்லிணக்கம் உருவாக முடியாது.
வேண்டுமானால் நல்லிணக்கம் தொடர்பில் உச்சரிக்கலாம் – சில அரசுசாரா நிறுவனங்களுக்கு நிதி கிடைக்கலாம்.
மேற்குலகமும் தாங்கள் இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு உதவுவதாக கூறிக்கொள்ளலாம்.
ஆனால், இறுதியில் அனைத்தும் விழலுக்கிறைத்த நீராகவே முற்றுப்பெறும்.
கடந்த 14 வருடங்களாக பேசப்பட்ட நல்லிணக்கத்தின் கதை இந்த நிலையில்தான் இருக்கின்றது.