22-வது உலகக் கிண்ண காற்பந்துப் போட்டி கட்டாரில் இடம்பெற்றுவருகிறது. இதில் நேற்று நள்ளிரவில் லுசைல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ‘சி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் ஆர்ஜென்டினா மற்றும் மெக்சிகோ அணிகள் மோதின. பரபரப்பாக ஆரம்பித்த இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் எந்த அணியினரும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் இரண்டாம் பாதி ஆட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அப்போது ஆர்ஜென்டின அணியின் மெஸ்ஸி ஆட்டத்தின் 64 வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதனையடுத்து ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் ஆர்ஜென்டின அணியின் பெர்னான்டெஸ்இ தனது அணிக்காக இரண்டாவது கோலை அடித்து அசத்தினார். இறுதியில் ஆர்ஜென்டின அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் போட்டியில் கோல் அடித்ததன் மூலம் மெஸ்ஸி உலகக் கோப்பை வரலாற்றில் தனது 8-வது கோலைப் பதிவுசெய்தார். இதன் மூலம் உலகக் கிண்ணத்தில் ஆர்ஜென்டின அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் டியாகோ மரடோனாவுடன் மெஸ்ஸி 2வது இடத்தை பகிர்ந்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் 10 கோல்கள் அடித்து ஆர்ஜென்டின வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.