உலகம் முழுவதும் கொரோனா இறப்பு 35 வீதத்தால் உயர்வு!

0
183

உலகெங்கும் கடந்த 4 வாரங்களில் கொரோனா இறப்பு 35 வீதத்தால் அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாப் பாதிப்பு தொடர்ந்து வருகின்றது. தொற்று பாதிப்பைக் குறைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘கொரோனாத் தொற்றுடன் வாழக்கற்றுக்கொண்டதால் தொற்றுப் பாதிப்பு இல்லை என்று எடுத்துக்கொள்ள முடியாது. தற்போது பாதிப்பு அதிகரித்து வருகின்றது. நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும், மற்றவர்களைப் பாதுகாக்கவும் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். உலகம் முழுவதும் கடந்த நான்கு வாரங்களில் கொரோனா, குரங்கம்மை உள்ளிட்ட உலகளாவிய நோய்கள் தொடர்பான இறப்புக்கள் 35 வீததத்தால் அதிகரித்துள்ளன. கடந்த வாரம் மட்டும் கொரோனாவுக்கு 15 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருக்கும் போது இது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே, அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் ஆகியவற்றைப் பின்பற்றுங்கள்’ என தெரிவித்தார். மேலும், குரங்கம்மை குறித்து கருத்து வெளியிட்ட டெட்ரோஸ் அதானோம் கடந்த வாரம் 7,500 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதியாகியுள்ளது. முந்தைய வாரத்தைவிட பாதிப்பு 20 வீதம் அதிகமாகும். தற்போது வரை 92 நாடுகளில் 35 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர்என தெரிவித்தார்.