உலகிலேயே ஒரே நாளில் அதிக உயிரிழப்பு இந்தியாவில்! 6148 பேர் மரணம்!!

0
528

உலகிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பலியானது நேற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. அதாவது கடந்த 24 மணி நேரத்தில் 6148 பேர் பலியானதாக இந்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
கொரோனா பேரழிவு தொடங்கியது முதல் ஒரே நாளில் இத்தனை பேர் இதுவரை பலியானது இல்லை என்பதால் அதிர வைத்துள்ளது கொரோனா பரவல்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 3வது நாளாக 1 லட்சத்திற்கும் கீழே குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 94,052 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,51,367 பேர் குணமடைந்து மீண்டுள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய முடக்கம் அமல்படுத்தப்பட்டதன் காரணமாக தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை விட குணமடைந்தோர் எண்ணிக்கை கடந்த ஒரு மாதகாலமாக அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 94,052 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,91,83,121 பேராக அதிகரித்துள்ளது. கொரோனோ தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 கோடி பேரை எட்டப்போகிறது.
கொரோனாவால் பாதிக்கப்படுவோரை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை இன்றும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,51,367 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,76,55,493 பேராக உயர்ந்துள்ளது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 11,67,952 பேராக குறைந்துள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது நம்பிக்கையை அதிகரித்து வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 6148 பேர் உயிரிழந்துள்ளனர். இது உலக அளவில் புதிய உச்சம் ஆகும். இதற்கு முன்பு அமெரிக்காவில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி ஒரே நாளில் 5444 பேர் இறந்தனர். அந்த வகையில் உலகிலேயே ஒரே நாளில் அதிக பலி எண்ணிக்கையைக் காட்டிய நாடு இந்தியாதான். நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,59,676 பேராக அதிகரித்துள்ளது. பீகாரில் ஒரே நாளில் 3951 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பீகார் மாநிலத்தில் கொரோனா பரவத்தொடங்கியது முதல் பல வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோரின் முழுமையான எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாமல் இருந்துவந்தது. மரணங்களின் எண்ணிக்கை தொடர்பாக பீகார் சுகாதாரத்துறை அமைச்சகம் மறுகணக்கீடு செய்தது. அந்த மறுகணக்கீட்டில் 3 ஆயிரத்து 951 உயிரிழப்புகள் மாநில சுகாதாரத்துறையின் கணக்கில் சேர்க்கப்படாமல் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, கணக்கில் காட்டப்படாத அந்த உயிரிழப்புகள் மறுகணக்கீட்டின் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஜனவரி முதல் ஜூன் 09ஆம் தேதி வரை 23,90,58,360 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் இத்தனை பேர் பலியானது மக்களுக்கு மிகப் பெரிய எச்சரிக்கையாகும். கொரோனா அலைகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2வது அலையின் வீரியம் குறைந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் அதிக அளவிலான ஒரு நாள் உயிர்ப்பலியை இந்தியா கண்டுள்ளது அதிர வைக்கிறது.