உலகிலேயே குடியேறுவதற்கு ஏற்ற அல்லது விரும்பத்தக்க நாடாக, கனடா உள்ளது என கூகுள் தேடலின்படி அவுஸ்திரேலிய ஆய்வு தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள 50 நாடுகளில் வட அமெரிக்க நாடான கனடா குடிபெயர்வதற்கு மிகவும் விரும்பப்படும் இடமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது என அவுஸ்திரேலிய இணையதளமான கொம்பெயார் த மார்க்கெட் தெரிவித்துள்ளது. கொம்பெயார் த மார்க்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனடா, வேலைக்காக வரும் வெளிநாட்டவர்களுக்கு மிகவும் வரவேற்கத்தக்க நாடு. இது மிகவும் மாறுபட்ட மற்றும் பன்முக கலாச்சார நாடாக மாற வழிவகுத்துள்ளது. மேலும், அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை, சிவில் உரிமைகள், வாழ்க்கைத் தரம், பொருளாதார சுதந்திரம் மற்றும் கல்வி போன்ற விடயங்களுக்கும் இது தொடர்ந்து உயர் தரவரிசையில் உள்ளது. இரண்டாவது மிகவும் பிரபலமான குடியேற விரும்பத்தக்க நாடாக ஜப்பான் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும், சீனா மற்றும் பிரான்ஸ் நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் இருப்பதாகவும் ஆய்வின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும், வீடுகள், சொத்து நகர்தல், இடமாற்றம் ஆகிய கூகுள் தேடல் சொற்களின் வருடாந்திர அளவைப் பார்ப்பதன் மூலம் ஆய்வின் முடிவுகள் உருவாக்கப்பட்டன: அந்த ஆய்வின் முடிவுகள், பிற சர்வதேச அமைப்புகளால் வெளியிடப்பட்ட பிற அறிக்கைகளின் முடிவுகளையே எதிரொலிக்கின்றன. அவை வழக்கமாக கனடாவையே சிறந்த அல்லது முதன்மையான விருப்பமான இடமாக வைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.