உலக ஊடக சுதந்திர தினமானது ஒவ்வொரு வருடமும் மே மாதம் 3ஆம் திகதி கடைபிடிக்கப்படுகிறது.
1991ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பின் 26ஆவது பொதுக் கூட்டத்தில் சிபாரிசு செய்யப்பட்ட “உலகின் சகல பிராந்தியங்களுக்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டு சுதந்திரத்துக்கானதும், ஊடக சுதந்திரத்தினதும் பாதுகாப்புக்கும் மேம்படுத்தலுக்குமான ஆணை” என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக இத்தினம் உருவானது.
இதேவேளை, “சுதந்திரமானதும் பல்தன்மையானதுமான ஊடகத்துறையை ஊக்குவித்தல்” எனும் தொனிப்பொருளில் யுனெஸ்கோ கருத்தரங்கொன்று 1991ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி முதல் மே மாதம் 3ஆம் திகதி வரை நமீபியாவின் வைன்ட்ஹோக் நகரில் நடைபெற்றது.
வைன்ட்ஹோக் பிரகடனம் (Windhoek Declaration) என்று அழைக்கப்படும் இந்த பிரகடனம் 1991ஆம் ஆண்டில் நடந்த யுனெஸ்கோ அமைப்பினால் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26ஆம் அமர்விலும் அங்கீகரிக்கப்பட்டது.
1993ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் 3ஆம் திகதி “சர்வதேச பத்திரிகை சுதந்திர தினமாக” பிரகடனப்படுத்தப்பட்டது.