நேற்று நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் இங்கிலாந்து – பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. போட்டியின் இரண்டாவது பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வீரர் ஹேரி கேன் முதல் கோலை அடித்து ஆட்டத்தை சமன்செய்தார். ஆட்டத்தின் 78-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரரான ஒலிவர் கிரௌடு தனது அணிக்கான இரண்டாவது கோலை அடித்து அணியை முன்னிலை பெறச்செய்தார். தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதன்மூலம் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் அணி மொரோக்கோ அணியை எதிர்க்கொள்ளவுள்ளது. எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள அரையிறுதி போட்டியில் ஆர்ஜென்டினா அணி குரேஷிய அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.