உலக நீர் வளப் பாதுகாப்பு அமைப்பை நிறுவிய சவூதி அரேபியா

0
91

உலகளாவிய நீர் வளத்தை பாதுகாப்பதற்கான ஓர் அமைப்பை சவூதி அரேபியா நிறுவுவதாக அந்நாட்டு பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அறிவித்துள்ளார்.

உலகின் நீர் விநியோகச் சிக்கல்களை சீர்செய்யும் தூர நோக்கோடு இவ்வமைப்பு நிறுவப்பட்டுள்ளதோடு சுற்றுச்சூழல் மற்றும் வளங்களை பாதுகாத்தல் தொடர்பான சவூதி அரேபியாவின் கரிசனைக்கான ஒரு எடுத்துக்காட்டாக இத்திட்டம் அமைகிறது.

உலகளாவிய நீர் வளத்தை பாதுகாப்பதற்கான பிற நாட்டு அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளின் முயற்சிகளை ஒருங்கிணைத்து அவற்றை மேம்படுத்தி அவற்றோடு சேர்ந்து பயணிப்பதற்கு இவ்வமைப்பு முயற்சிக்கிறது.

அத்தோடு இந்நிறுவனம், பிற நாடுகள் மற்றும் நிறுவனங்களோடு இணைந்து நீர் பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்ப அமைப்புகளை மேம்படுத்தவும், புது கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவும் முயற்சிகளை மேற்கொள்கிறது. 

மேலும் நீர் வளப் பாதுகாப்பு மற்றும் விநியோகம் தொடர்பான உயர் திட்டங்களை உருவாக்குவதற்கும் நிதி அளிப்பதற்கும், உலக நீர் ஆதாரங்களின் நிலைத்தன்மையை உறுதி செய்யவும் அனைத்து மக்களுக்கும் நீரை பெற்றுக்கொள்வதற்கான வசதியை ஏற்படுத்துவதிலும் இந்நிறுவனம் அக்கறை செலுத்துகிறது.

சவூதி அரேபியா ஆக்கபூர்வமான சுதேச முறைமைகளை பயன்படுத்தி பல ஆண்டுகளாக நீர் சுத்திகரிப்பு, பாதுகாப்பு மற்றும் விநியோகத்தில் அடைந்த கணிசமான முன்னேற்றங்கள் உலகளவில் அங்கீகாரம் பெற்றுள்ளன. 

நான்கு கண்டங்களில் உள்ள பல்வேறு நீர் பதுகாப்பு மற்றும் சுத்திகரிப்பு திட்டங்களுக்காக 6 பில்லியனுக்கும் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நிதி சவூதி அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த அமைப்பு, தங்கள் தேசிய நிகழ்ச்சி நிரல்களில் நீர்வள பாதுகாப்பு தொடர்பான முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நாடுகளுடனும், தண்ணீர் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நாடுகளுடனும் இணைந்து பணியாற்றவிருக்கிறது. 

2050ஆம் ஆண்டளவில் உலகின் தண்ணீர் தேவை இரட்டிப்பாகும் மற்றும் உலக சனத்தொகை 9.8 பில்லியன் வரை அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்ட நிலையில், சவூதியின் இத்தகைய ஒத்துழைப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.