ஊதுபத்தி விற்பனை எனும் போர்வையில் திருட்டு: 05 பெண்கள் கைது!

0
95

ஹட்டன் நகரில் பணப்பைகளை கொள்ளையிட்டு வந்த ஐந்து பெண்கள் இன்று ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் தீபாவளி பண்டிகையின் போது, ​​ஹட்டன் மற்றும் ஏனைய பெருந்தோட்டங்களை அண்டியுள்ள பிரதான நகரங்களுக்கு வரும் நபர்களிடமிருந்து தங்க ஆபரணங்கள் மற்றும் பணப்பைகளை திருடுவதற்காக இந்த ஐந்து பெண்களும் மற்றொரு குழுவுடன் ஹட்டன் நகருக்கு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பெண்களும், ஊதுபத்தி விற்பனை செய்யும் போர்வையில் பணப்பைகள் மற்றும் தங்க ஆபரணங்களை திருடுவதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 18 – 30 வயதுக்குட்பட்ட மேற்படி பெண்களிடம் பல பணப்பைகள் மற்றும் பல போதைப்பொருள் பொதிகள் இருந்ததாகவும், இதற்கு முன்னரும் இவர்கள் ஹட்டனின் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஐந்து பெண்களும் மீண்டும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.