எதிர்கால தலைமுறையை அழிக்கும் வகையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரை ஒடுக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த
ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
நாரம்மல் பிரதேச சபையின் புதிய கட்டிடத்தை நேற்றைய தினம் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
‘இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கும் மக்களுக்கு சேவை செய்வதற்கும் நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.
நமது வருங்கால சந்ததியினரை பாதுகாக்க நாமும் உழைக்க வேண்டும். இன்று போதைப்பொருள் பிரச்சினை தலைதூக்கியுள்ளது.
நமது பிள்ளைகளை பாதுகாக்க போதைபொருள் வர்த்தகத்திற்கு எதிராக செயல்பட வேண்டும்.
அவ்வாறு செய்யாவிடின், நம் தேசத்தை அழிப்பதற்காக அவ்வாறான செயற்பாட்டை முன்னெடுப்போரை நாம் அடக்காவிட்டால், நம் பிள்ளைகள் பெரும் சிக்கலுக்கு ஆளாக நேரிடும்.
எனவே போதைப்பொருளில் இருந்து மக்களை பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுப்போம். மேலும் நமது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். தமது பிள்ளைகள் குறித்து சில பெற்றோர் அவர்களது சிறு வயதில் அதிக கவனம் செலுத்துகின்ற போதிலும், அவர்கள் உயர் வகுப்புக்கு செல்லும் போது அவர்கள் மீதான கவனம் குறைந்துவிடுகிறது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளை அவர்களது போக்கில் விட்டுவிட்டு தமது வேலையைத் தொடர்கிறார்கள்.
பிள்ளைகளை சிறு வயதைவிட அவர்கள் பெரியவர்களாக வளரும் போதே அவர்கள் குறித்து அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே அவர்கள் இளைஞர்களாக வளர்ந்து நிற்கும் போது அவர்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது பெற்றோரதும், பெரியோரதும் கடமையாகும். அவ்வாறு செய்யாவிடின் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்’ எனக் குறிப்பிட்டார்.