எதிர்வரும் ஜனாதிபதி தேர்லில் போட்டியிடுவது நிச்சயம்: விஜயதாஸ ராஜபக்ஸ

0
67

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்ற அடையாளம் கிடைக்காது விட்டாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயமானது. வழக்கு விவகாரங்கள் நிறைவடைந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் ஊடாகப் போட்டியிடுவோம்.

இல்லையென்றாலும் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயமானது. அதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை. தேர்தல்கள் காலத்தில் உணர்ச்சிகரமான பேச்சுக்களைப் பேசி மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக்கொள்ளும் கலாசாரத்தினை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்ற முறைமை மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். இந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டே எதிர்வரும் ஜனாதிபதி தேர்லில் போட்டியிடுவதற்கு தீர்மானித்தேன். அந்த தீர்மானத்துக்கு அமைவாக போட்டியிடுவதில் உறுதியாக இருக்கின்றேன்.

அதேநேரம், வடக்கு, கிழக்கு மக்களுடன் உரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் விரைவில் அம்மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளுடன் உரையாடல்களை மேற்கொள்ளவுள்ளேன். தேசியப் பிரச்சினை தொடர்பில் வடக்கு, கிழக்கு மக்களும், தென்னிலங்கை மக்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வு காணப்பட வேண்டும்.

தேர்தல் அரசியலை மையப்படுத்தி வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் இனவாதத்தினை உயர்த்துவதன் மூலம் நன்மைகளை அடைவதற்கு எதிர்காலத்திலும் இடமளிக்க முடியாது. அந்த அரசியல் கலாசாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். இதேநேரம், ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கான சில முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன.

அந்த முயற்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. அரசியலமைப்புக்கு அமைவாக உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியமாகின்றது. ஆகவே தேர்தலை பிற்போடும் முயற்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு ஜனநாயகத்தினை உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.