நாடாளுமன்றம் எதிர்வரும் ஜுன் 04ம் திகதி முதல் 07ம் திகதி வரை கூடவிருப்பதாக நாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக்கூட்டத் இத் தீர்மானம் எடுக்கப்பட்டது. அதற்கமைய, ஜுன் 04ம் திகதி காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், பெண்களின் வலுவூட்டல் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது.

ஜுன் 05ம் திகதி இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி, குடியியல் வான்செலவுச் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி என்பவற்றை விவாதமின்றி அங்கீகரிப்பதற்கும் இங்கு இணங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணி வரை கல்வித்துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பான எதிர்க்கட்சியால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்துக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜுன் 06ம் திகதி இலங்கை மின்சாரம் சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது. ஜுன் 07ம் திகதி, பொதுத் தனிசு முகாமைத்துவம் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளை, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை, நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
