எது உள்நாட்டு விவகாரம்?

0
95

சீனத் தூதுவரின் யாழ்ப்பாண விஜயத்தின் போது – சிவில் சமூகத் தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகளை அவர் சந்தித்திருந்தார்.
இதன் போது – தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது, அது ஒரு உள்நாட்டு பிரச்னை – உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிடுவதில்லை – இதுவே சீனாவின் கொள்கை நிலைப்பாடு – என்பதே
தூதுவரின் பதிலாக இருந்திருக்கின்றது.
‘ஈழநாடு’ இது தொடர்பில் ஏற்கனவே செய்தியிட்டிருந்தது.
ஒவ்வொரு பெரிய நாடுகளும் அவற்றின் நலன்களின் அடிப்படையில்தான் செயல்படுவார்கள்.
இலங்கை தீவில் தலையீடு செய்யும் பிரதான சக்திகளான இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கு பிரத்தியேக நலன்கள் உண்டு.
இந்தியா ஒரு பிராந்திய சக்தி என்னும் வகையில் அதன் முலோபாய நலன்களை கருத்தில் கொண்டு சில விடயங்களை முன்னெடுக்கும் – அதே போன்று அமெரிக்காவும் அதன் உலகளாவிய நலன்களை கருத்தில்கொண்டு சில நகர்வுகளை முன்னெடுக்கும்.
இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
இதனை விளங்கிக் கொள்வதும் அதனடிப்படையில் செயல்படுவதும்தான், தமிழர் தரப்புக்கள் செய்ய வேண்டியது.
இந்த பின்புலத்தில் நோக்கினால் சீனாவும் அதன் நலன்களின் அடிப்படையில்தான் செயல்படுகின்றது – அப்படித்தான் செயல்படவும் முடியும்.
இன்றைய உலக அரசியல் அரங்கில் சீனா ஒரு பிரதான பேசுபொருள்.
இதற்கு சீனாவின் அசுர வளர்சியா காரணம் – இல்லை – சீனாவின் அரசியல் முறைமையே அதற்கான காரணம்.
சோவியத் யூனியனின் வீழ்சிக்கு பின்னர், தாராளவாத உலக ஒழுங்கு மட்டுமே – ஒரேயொரு அரசியல் ஒழுங்கு என்னும் நிலைமை உருவாகியது.
இதற்கு அமெரிக்கா தலைமையேற்றது.
கடந்த இருபது வருடங்களாக உலக அரசியலில், அமெரிக்கா தலைமையிலான ஒழுங்கே மேலாதிக்கம் செலுத்தி வருகின்றது.
இந்த ஒழுங்கை கேள்விக்குள்ளாக்கும் சக்தியாக சீனா எழுச்சியடைந்து வருவதே இன்றைய போட்டியரசியலுக்கான காரணமாகும்.
தாராளவாத ஜனநாயக முறைமையின் கீழ் இயங்கும் ஒரு நாடாக சீனா இருக்குமாயின் – அதன் பொருளாதார எழுச்சி அமெரிக்காவிற்கு ஒரு பிரச்சினைக்குரியதாக இருந்திருக்காது.
ஒரு சுமுகமான போட்டி நிலையாகவே இருந்திருக்கும்.
சீனாவின் அரசியல் கட்டமைப்பானது, மேற்குலகம் முன்னிறுத்தும் ஜனநாயக விழுமியங்களுக்கு அமைவானதல்ல.
இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் சீனா தமிழ் மக்களோடும் உறவாட முற்படுகின்றது.
எவர் வரினும், அவருடன் பேசுவதில் தவறில்லை.
ஆனால் நமது அணுகுமுறை எவ்வாறானதாக இருக்கவேண்டும் – என்பதுதான் பிரச்னைக்குரியது.
சீனத் தூதுவர் தமிழ் பிரதிநிதிகளை சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையீடு செய்வதில்லை என்கின்றார்.
அவ்வாறு கூறும் சீனாவோ – மறுபுறமாக, ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றது.
சர்வதேச அரங்குகளில் இலங்கை அரசின் நிலைப்பாடுகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றது.
இறுதி யுத்தத்தின் போது, ராஜபக்ஷவின் யுத்தத்திற்கு பல்வேறு வழிகளிலும் சீனா உதவியது.
இது தொடர்பில் அப்போது இராணுவத் தளபதியாக இருந்த, சரத் பொன்சேகாவே கூறியிருக்கின்றார் – இந்தியாவும் அமெரிக்காவும் ஆயுத உதவிகளை செய்யாத காரணத்தினால்தான் – நாங்கள் சீனாவின் பக்கமாக செல்ல வேண்டியேற்பட்டது.
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான பிரச்னை ஒரு உள்நாட்டு பிரச்னைதான் – ஆனால் அதனை ஒரு உள்நாட்டு பிரச்னையாக கருதி, சீனா எட்ட நிற்கவில்லை.
ஆனால் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு – நீதி என்று வருகின்ற போதே – அதனை உள்நாட்டு விவகாரமாக பார்க்க வேண்டும் என்கிறது சீனா.
இந்த இடம்தான் பிரச்னைக்குரியது.
இந்த இடம்தான், இலங்கையின் விவகாரங்களில் தலையீடு செய்யும் ஏனைய நாடுகளும் – சீனாவும் வேறுபடும் புள்ளியாகும்.
இந்த இடம்தான் தமிழர் நோக்கில் பிரச்னைக்குரியது.
தமிழர் பிரச்னையை ஒரு உள்நாட்டு விவகாரமாக நோக்கினால் – வெளித்தரப்புக்களுக்கு எதுவுமில்லை.
அவ்வாறு வெளித்ததரப்புக்களின் தலையீடின்றி பிரச்னையை தீர்ப்பதற்கு இலங்கையின் ஆட்சியாளர்கள் தயாராக இல்லை.
இந்த நிலையில் – இதனை ஒரு உள்நாட்டு விவகாரமாக நோக்குமாறு, சீனா எவ்வாறு வலியுறுத்த முடியும்?